திருமங்கலத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் கலை பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024-25 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய மதுரை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயண நிகழ்ச்சி திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயண நிகழ்வானது கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குனரும், மதுரை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான. MSP. குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் கலைக்குழுவினர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கிராமிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் மூலமாக மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்தல், காற்று மாசு தவிர்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வானது டி. கல்லுப்பட்டி பேருந்து நிலையம், டி. கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பேரையூர் பேருந்து நிலையம், உசிலம்பட்டி பேருந்து நிலையம், செக்காணூரணி பேருந்து நிலையம், நாகமலை புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநரும் மதுரை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான . குழந்தை வேல் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக