பூண்டிமாதா பேராலயத்தில் மறைந்த அருட்தந்தை வி.எஸ்.லூர்துசேவியருக்கு 54ஆவது நினைவுநாள் சிறப்பு திருப்பலி.
திருக்காட்டுப்பள்ளி, ஏப். 16: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பங்கு தந்தையாக பணியாற்றிய அருள் தந்தை வி. எஸ்.லூர்துசேவியர் காலத்தில் தான் பூண்டிமாதாவின் புகழ் நாடெங்கும் பரவியது. இன்று பேராலயமாக திகழ காரணமாக இருந்த அருள்தந்தை வி.எஸ்.லூர்துசேவியருக்குபுதன்கிழமை (ஏப்.16) 54ஆவது நினைவுநாளில் அவர் விரைவில் புனிதர் பட்டம் பெற மன்றாட்டும் சொல்லப்பட்டு, சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இது குறித்து பேராலய அதிபர் பி.ஜெ.சாம்சன் கூறியது:-
1955 செப்டம்பர் மாதம் பூண்டியின் பங்கு குருவாக வி.எஸ்.லூர்துசேவியர் சுவாமிகள் பொறுப்பேற்றார்.இவரது காலம் ஆலயத்தின் பொற்காலமாகும்.இவரது தன்னலமற்ற சேவையும், அயராத உழைப்பும், பக்தியும் பூண்டிமாதாவின் பெருமைகளை உலகறியச் செய்தன. 17 ஆண்டுகள் தன்னலம் பாராது இறைபணி செய்த வி. எஸ்.லூர்துசேவியர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் 16.04.1972ல் இறைவனடி சேர்ந்தார்.அவரது உடல் பூண்டிக்கு கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும் அவரது கல்லறையில் வேண்டுபவர்கள் நன்மைகளை பெற்று வருகின்றனர் என்றார்.
நிகழ்வில் பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பிஜெ.சாம்சன் தலைமையில் துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், புனல்வாசல் பங்கு சந்தை சந்தானம், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட் சேவியர், உதவித்தந்தையர் எஸ்.ஜான் கொர்னேலியூஸ், எஸ்.ஜெ. செபாஸ்டின், ஆன்மீக தந்தையர் ஏ.அருளானந்தம், பி.ஜோசப் ஆகியோர் சிறப்பு திருப்பலி ஓப்புக்கொடுத்து அவரது கல்லறையில் கூடி செபித்தனர். இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா நிருபர் ஜே.ஜேசுராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக