சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, புவிஅமைப்பியல் துறையில் பெருநிறுவன, தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் புவிஅமைப்பியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் 19/03/2025 அன்று ஒரு நாள் தேசிய பயிலரங்கம் பேராசிரியர் ஏ.எல். மெய்யப்பன் & எம். சரோஜா அறக்கட்டளையின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டது.
புவிஅமைப்பியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில், புவிஅமைப்பியல் துறைத்தலைவர் உதயகணேசன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமையுரை ஆற்றினார். மாணவர்கள் இது போன்ற நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி படிக்கும்போதே தங்களை வேலை வாய்ப்புகளுக்காக தயார் செய்து கொள்ளவேண்டும் எனவும் இதுபோன்ற பல நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வரும் புவியமைப்பியல் துறை ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் பேசினார்.
இந்த பயிலரங்கில் புவிஅமைப்பியல் சார்ந்த செயற்கைக்கோள் தொலை உணர்வு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் வளர்ச்சி பற்றிய நுண்ணறிவுகளைப் பல நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர். சென்னை பல்கலைக்கழகத்தின் புவியமைப்பியல் துறையின் முன்னாள் பேராசிரியர் இராம்மோகன் புவியமைப்பியலுக்கும் மனித குலத்திற்கும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ள உறவு குறித்தும் செம்பு காலம் பித்தளை காலம் மற்றும் இரும்பு காலம் குறித்தும் விவரித்து பேசினார். சென்னையில் உள்ள தேசிய கடல்சார் விஞ்ஞானி சிஷிர் குமார் தாஷ் பேசுகையில் கடல்சார் புவியமைப்பியல் மற்றும் தொலை உணர்வு துறைகளில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி விவரித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் இலட்சுமணன் பேசுகையில் உலகளாவிய வழிச்செலுத்துதல் செயற்கை கோள் அமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் அது எவ்வாறு இயற்கை வள கண்காணிப்பு பணியில் பயனுள்ள பங்களிப்பை வழங்குகின்றது என்றும் விளக்கினார். பிரதீப் கிஷோர் மற்றும் திருச்சி தேசியக் கல்லுரியின் உதவி பேராசிரியர் கார்த்திக் ஆகியோர் பேசுகையில் மாணவர்கள் தொலை உணர்வு அறிவியல் குறித்த திறமைகளை எவ்வாறு வளர்த்து கொள்ளலாம் எனவும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் பெருகி கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்கள். சென்னை மேப் ஐடி கம்பெனியின் தொழில் நுட்ப வல்லுநர் கணேசன் பேசுகையில் தங்களது நிறுவனம் செய்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் அவைகளில் புவிஅமைப்பியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்தும் விளக்கினார். இப்பயிலரங்கில் புவி அமைப்பியல் துறையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர்.
புவிஅமைப்பியல் துறைப்பேராசிரியர் இராஜ்மோகன் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக