பாளை, தூய சவேரியார் கல்லூரியின் 99 வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் காட்வின் ரூபஸ் அடிகளார் பட்டமளிப்பு விழா பிரகடனத்தை வாசித்து துவக்கி வைத்தார். கல்லூரி அறிக்கை வாசிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி என்.ஐ.சி.ஹெச்.இ.பல்கலைக்கழகத் துணைவேந்தர் டெசி தாமஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த சமுதாயத்திற்கு பாளை செயின்ட்வசேவியர் கல்லூரி சிறந்த கல்வியாளர்களையும் சாதனையாளர்களையும் தந்து வருகிறது. இந்த தன்னாட்சி கல்லூரி அகில இந்திய அளவில் நேக் ரேங்க் பட்டியலில் 36 வது இடத்தை பிடித்து கல்வி சேவை செய்கிறது. பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் இந்த தருணத்தில் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அது தலைமை பண்பாக இருக்கலாம். உங்களது பங்களிப்பு, கண்டுபிடிப்பாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இருக்க வேண்டும்.
உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்ப துறையில் சந்திராயன் மூன்று, ஆதித்யா எல் ஒன் போன்றவை மைல்கல் சாதனைகளை படைத்துள்ளன.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக அமையும் வாய்ப்பு எட்டி வருகிறது. பசுமைப் புரட்சி, பயோ என்ஜினியரிங், விவசாயம் போன்றவைகளிலும் சாதனை படைத்து வருகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏஐ தொழில்நுட்பம், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக அமைந்துள்ளது. இந்த நாட்டிற்கும் உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் உங்கள் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் எதிர்காலம் அமைய வேண்டும். திருவள்ளுவரின், "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றறை யவை" என குறிப்பிட்டுள்ளது போல் கல்வி மட்டுமே மனிதனுக்கு சிறந்த சொத்து, மற்றவை நிரந்தரமானவை அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கான சிறந்த எதிர்காலம் இந்த உலகில் காத்திருக்கிறது என்றார்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த 1245 மாணவர்கள் தங்கள் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனர். முதல்வர் முன்னிலையில் பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தேர்வுக்கட்டுப்பாட்டு முதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் அதிபர் இன்னாசிமுத்து, கல்லூரியின் செயலர் புஷ்பராஜ், இணைமுதல்வர் லூர்து சாமி, மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக