காட்டுமன்னார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

காட்டுமன்னார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு.

காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது தோண்ட தோண்ட மண்ணுக்கடியில் 9 கடவுள்சிலைகள் கிடைத்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என மக்கள் தெரிவிப்பு


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உத்திராபதி என்பவர் புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டும்போது அதில் ஒரு பள்ளத்தில் வெட்டும்போது கடப்பாரை எதன் மீதோ மோதும் சத்தம் கேட்கவே அதை உற்று கவனித்த போது ஏதோ பொருட்கள் தென்படுவதை கண்டார். 


பின்னர் மெல்ல அதைத் தோண்டி பார்க்கும்போது அதில் சுவாமி சிலைகள் இருப்பது தென்பட்டது.பின்னர் இது குறித்து வருவாய் துறை, காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் முன்னிலையில் அந்த பள்ளத்தை மேலும் தோண்டும்போது ஒன்றன்பின் ஒன்றாக அருகருகே ஒன்பது சுவாமி சிலைகள் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டன. 


அவை சிவன் பார்வதி, இடம்புரி விநாயகர், நடராஜர், ஆடிப்பூர அம்மன், போகர், சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்மன், திரிபூரநாதர் (சிவன்), சண்டீஸ்வரர், திருஞானசம்பந்தர் என ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மக்கள் தெரிவிக்கும்போது இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கக்கூடும் என்றனர். 


மேலும் அதிகாரிகள் தெரிவிக்கும் போது இதன் முழுமையான விவரங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தனர். முக்கியமாக தற்போது சிலைகள் எடுக்கப்பட்ட இடம் ஏற்கனவே கோவில்கள் இருந்த இடமா? அல்லது சிலைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு யாரேனும் திருடி வந்து புதைத்து வைக்கப்பட்ட இடமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இவற்றின்  விலை மதிப்பு குறிப்பிட முடியாததாக இருக்கிறது எனவும் கூறினர்.
ஒரே பள்ளத்தில் ஏழு அடிக்கு கீழே ஒன்றன்பின் ஒன்றாக ஒன்பது சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வரலாற்று சிறப்புமிக்க பொல்லாப் பிள்ளையார் கோவிலிலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டால் இந்த இடங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக இருக்க கூடும், பல்வேறு புதை படிமங்கள், சிலைகள் தென்படக்கூடும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வீடு கட்டும் இடத்தில் வேறு ஏதேனும் சிலைகள் உள்ளனவா என ஜேசிபி எந்திரத்தின் மூலம் தோண்டி பார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/