தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக். 29) ஈரப்பதம் மிகுந்த கிழக்குதிசைக் காற்று வீசுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அதன் தாக்கத்தால், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டி இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக். 30, 31, நவ.1, 2 ஆகிய 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக். 30-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 31-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நவ. 1-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 2-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 92 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக