மானாமதுரை பேருந்து நிலையத்தில் உள்ள வழித்தடங்களில் சாலை விதிமுறைகள் பின்பற்றப்படுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடம் ஆகும். இப்பேருந்து நிலையத்தில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் வலதுபுறமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து சுற்றிச்செல்லாமல் இடது புறமாக சுற்றிச்செல்லும் அவலநிலை பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதேபோல்தான் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்துகளின் நிலைமையும். பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு பேருந்துகளும் வலதுபுறமாக உள்நுழைந்து பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்துவதற்கான ஏதுவான கட்டமைப்பு வசதி மிக அருமையாக உள்ளது. ஆனால் எந்த ஒரு பேருந்து ஓட்டுனர்களும் பேருந்தை அதன் நிறுத்தும் இடத்தை பயன்படுத்தி நிறுத்தாமல் தான்தோன்றித்தனமாக தாங்கள் நினைக்கும் இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றவும் இறக்கவும் செய்து வருகின்றனர்.
மேலும் மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் கீளமேல்குடி விளக்கு சாலை, டாஸ்மாக் கடை உள்ள 'ஒன் வே' சர்வீஸ் சாலையை தவிர்த்து ஏஎம் பேக்கரி மற்றும் மானாமதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக சாலை வழியாக எதிர் திசையில் செல்லும் நிலை தொடர்கிறது. இதில் என்ன குறையென்றால் ஏ.எம் பேக்கரி வழியாக பேருந்து செல்வதற்கான போதுமான அகலமான சாலை வசதி இல்லை மற்றும் அந்த சாலையில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் திருமண மண்டபம், பேக்கரி மற்றும் உணவகம் இருப்பதால் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. போதுமான சர்வீஸ் ரோடு வசதிகள் இருந்தும் ஒன்வே சாலையை கடைபிடிக்கப்படுவதும் இல்லை, அதற்கான நடவடிக்கைகளையும் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்வதும் இல்லை. ஒருவேளை டாஸ்மாக் கடை வசதிக்கேற்ப அல்லது டாஸ்மாக் கடை உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்த்திட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. கூடுதலாக டாஸ்மாக் கடைக்கு செல்வோர் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை வழிமுறைத்து தான் நிறுத்தி செல்கின்றனர்.
அடுத்ததாக கீழமேல்குடி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் வலது புறமாக திரும்பி சர்வீஸ் ரோடு எதிர் திசையில் சென்று பேருந்து நிலையத்தை அடைகின்றன. இதுவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும். இத்தகையநிலை வருங்காலங்களில் நீடித்தால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல ஏதுவான வழியின்றி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டுவிடுவதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் தங்களுடைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி கோயிலுக்கு செல்கின்றனர். குறைந்தபட்சமாக அந்த சர்வீஸ் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க முடியும் அல்லவா.
இப்பிரச்சனை குறித்து சில பொறியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், அனைத்து விதமான உள்கட்டை அமைப்பு வசதிகளும் மானாமதுரை பேருந்து நிலையம், பைபாஸ் சாலை சர்வீஸ் ரோடு ஆகியவற்றில் இருந்தும் போக்குவரத்து சீராக இல்லை எனவும்,போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் செல்வது, சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வது, அவ்வளவு தூரம் சென்று திரும்பி வர வேண்டுமா என்ற சலிப்பு மனநிலை, சிறிதும் ஆபத்தை பொறுப்பெடுத்தாமல் வாகன ஓட்டிகள் எதிர் திசையில் செல்கிறோமே மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழி இருக்குமா என்ற பொதுநலமின்மை போன்ற குறைபாடுகள், மற்றும் விழிப்புணர்வின்மையால் போக்குவரத்து பயணிகள் அன்றாடம் சாலையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
இத்தகைய சீரற்ற போக்குவரத்தை சரி செய்திட போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை போக்குவரத்து கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மிகவும் அவசியம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயணித்துள்ள நாங்கள் சிறு சிறு குறைபாடுகள் இருந்தாலும் கூட மானாமதுரையில் அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய போக்குவரத்து விதிமீறல்கள் ஏராளம். எடுத்துக்காட்டாக சிறிது தூரம் சென்று 'யூ டர்ன்' செய்வதை பொருளாதார ரீதியாக பேரிழப்பு ஏற்பட்டுவிடுவதாக பொதுமக்கள் பார்க்கின்றனர். ஆனால் அவசரத்திற்கு செல்லும் வாகனங்களை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் மானாமதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வாகனங்கள் கூட அவசர தேவைக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஏ.எம் பேக்கரியை கடந்து நான்குவழி சாலையை எட்டி விட முடியாது என்பது நிதர்சனம்.
மேலும் சாலைகளில் போடப்படும் பேரிக்காட்கள் மற்றும் தடுப்பான்கள் கச்சிதமாக இடப்படாததால், ஒரு சிறிய உதாரணத்திற்கு சாலையை கடக்கும் வாகனங்களை அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் கண்பார்வையால் பார்ப்பதற்கு ஏதுவாக இல்லாத காரணத்தால் வாகனங்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டு விரைவாக பேரிகாடை கடப்பது சிக்கல் முடிகிறது. பேரிகார்டின் நோக்கமே வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது, எதிரில் வரும் வாகனத்தை பரஸ்பரம் கண்கூடாக பார்க்கவும் கடக்கவும் செய்வதற்காகும். இதற்கான தீர்வு சாலையை கடக்கும் வழிக்கு பேரிக்கார்டை சற்று தூரத்தில் zigzag வடிவில் அமைப்பது தீர்வாகும். போக்குவரத்து அபதாரங்கள் பன்மடங்கு உயர்ந்துவிட்டாலும் கூட, வாகன விபத்துக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகம் நிகழும் இடத்திலும் கூட பொதுமக்கள் சாலை விதிகளை துச்சமென்று என்று நினைக்கின்றனர். ஆகவே போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்திட தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் சில இடங்களில் உள்ள மிக முக்கிய 'ஒன் வே' போன்ற இடங்களில் பிற மாநிலங்களில் அமல்படுத்தியுள்ள டயரை பஞ்சர் ஏற்படுத்தும் கருவிகளை தார் சாலையில் பொருத்திட வழிவகை ஏற்படுத்தினால், வாங்குன ஓட்டிகள் தங்களது தவறை தாங்களே சரி செய்து கொள்வர் என்றும் பல்வேறு தீர்வுகளை சுருக்கமாக தெரிவித்தனர்.
எனவே போக்குவரத்து விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தி, விபத்துகளை தவிர்த்திட உடனடியாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், மானாமதுரை போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை தலையிட்டு தமிழகம் முழுவதும் பின்பற்றப்படும் சாலை விதிமுறைகள் மானாமதுரையில் பின்பற்றப்படுகின்றனவா, போக்குவரத்து வழித்தடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, வேகத்தடை உள்ள இடத்திற்கான எச்சரிக்கை பதாகை, போக்குவரத்து சீராக இயங்கி வருகிறனவா, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் உள்ளனவா, மருத்துவமனைக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள இடையூறுகள் என்ன, ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு போக்குவரத்து வழித்தடங்கள் தடைகள் உள்ளதா, வழித்தடங்களில் எத்தகைய விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்பதை கண்டறிந்து வாகனப் போக்குவரத்தை மேம்படுத்திட வழிவகை செய்திட சாலைப்போக்குவரத்து பொதுநலனை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள், சாலைப் பொறியாளர்கள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக