திருச்சி மாநகரில் அமைக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த நூலகத்திற்கு, முன்னாள் முதல்வர் மற்றும் கல்விப் புரட்சி நாயகன் பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, பனங்காட்டுப் படை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. எம்.என். சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.
அதில், “காமராஜர் அவர்கள் ஆட்சியில் தமிழகத்தின் கல்வி துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாகவே இன்று தமிழகம் கல்வியில் முன்னணி மாநிலமாக உயர்ந்துள்ளது. பெருந்தலைவரின் பெயரில் நூலகம் அமைக்கப்படுவது, கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு பெரும் அங்கீகாரம் எனக் கருதுகிறோம்.
ஏற்கனவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், கிண்டி நினைவிடத்தில் 'கல்வி வளர்ச்சி நாள்' என அறிவித்திருப்பதும், பெருந்தலைவர் பிறந்தநாளில் அணையா விளக்கு ஏற்றியும் அவரை பாராட்டியிருப்பதும், நாடார் சமுதாய மக்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் வழங்கியிருக்கிறது.
இந்நிலையில் திருச்சியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிறுவனம் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
290 கோடி ரூபாய் நிதியுடன், 4.57 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இந்நூலகம், அறிவு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான மையமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் மற்ற நகரங்களிலும், முன்னணி தலைவர்களின் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக