ஆழ்வார்திருநகரியில் "உழவர் திரள்" ஆர்ப்பாட்டம்" - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 1 மார்ச், 2025

ஆழ்வார்திருநகரியில் "உழவர் திரள்" ஆர்ப்பாட்டம்" - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்பு.

தமிழின போராளி அ. வியனரசு மனைவி கோகிலா அம்மாள் மறைந்து ஓராண்டு நினைவு தினத்தில் அவரது உருவ பட திறப்பு விழா இன்று மார்ச் 1 மாலை 4 மணியளவில் ஆழ்வார்திருநகரியில் வைத்து நடைபெற்றது. 

அத்துடன் மருதூர் அணையிலிருந்து கங்கைகொண்டான் தொழிற்பேட்டைக்கு தாமிரபரணி  ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்கவும். ஆற்றைக் காடாக்கி பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வனத்துறையை வெளியேற்றி, 

தாமிரபரணி ஆற்றையும், 47ஆயிரம் ஏக்கர் பாசன உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி 
"உழவர் திரள் ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடுதலைக் களம் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ப.ராஜ்குமார் தலைமை தாங்கினார். தாமிரபரணி பாசன உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வியனரசு ஆர்ப்பாட்டம் முழக்கமிட்டார். தமிழர் ஏர் உழவர் விவசாயிகள் சங்க தலைவர் ராஜேஷ், முன்னாள் தென்கரை தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நயினார், இமானுவேல் சேகனார் ஆட்டோ சங்க தலைவர் அசோக் சங்க பொருளாளர் அருண் விஜயன் செயலாளர் பழனி. அகர தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதன்படி தாமிரபரணி பாசன உழவர்களின் கீழ்கண்ட நலக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன

தாமிரபரணி ஆறு எந்த ஒரு அண்டை மாநிலங்களின் அச்சுறுத்தலுக்கும் இடமில்லாத வகையில் தமிழ்நாட்டிற்குள்ளே தோன்றி தமிழ்நாட்டிற்குள்ளே கடலோடு கலக்கும் வற்றாத உயிராறாகும் (ஜீவநதி). இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த "தன்மாண் பொருநை" என இலக்கியங்களில் இடம் பெற்ற வரலாற்று புகழ் மிக்க நமது தாமிரபரணி ஆற்றின் இன்றைய அவல நிலையால் தான் 2023 திசம்பரில் வந்த பெரும் வெள்ளத்தால் நாம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இழப்புகளுக்கோ எல்லை இல்லை.

திருவைகுண்டம் அணையைக் கட்டிய வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆதித்தநல்லூர் முதல் ஆத்தூர் வரை இரு கரைகளையும் மிக வலிமையாக உயர்த்தி வலுப்படுத்தினர். ஆனால் விடுதலைப் பெற்ற பிறகு அதன் கரைகளின் இன்றைய நிலைகளைப் பார்த்தால் வேதனை தான் மேலிடுகிறது.

ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்காலும், கையூட்டு ஊழல்களின் முடை நாற்றத்தால் ஆற்றுப்பகுதிகள் ஆக்கிரமிப்பு மண்-மணல் கொள்ளை, வனத்துறையினரின் ஆற்றையழித்து காடாக்கும் மடமைத்தனத்தால் 2023 திசம்பர் பெரும் வெள்ளம் வந்த போது பொன்னன்குறிச்சியிலும், கொங்கராயகுறிச்சியிலும் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகள் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், ஆத்தூர் என தென்கரை, 

வடகரை வேளாண் குடி மற்றும் வணிகர் குடி மக்களைப் பேரிழப்புகளுக்கு உள்ளாக்கி தீர்க்க முடியாத பெரும் கடன் சுமைகளோடு துன்பப்படும் அவல நிலைக்குள் தள்ளியுள்ள இத்துயர நிலையிலிருந்து பொருநையின் மக்கள் விடுபட வேண்டுமானால் தமிழ்நாடு அரசு கீழ்வரும் கோரிக்கைகளை உரியவாறு ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும் என மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

1. பாபநாசம் முதல் புண்ணைக்காயல் வரை தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தி, இரு கரைகளையும் வலிமைப்படுத்த வேண்டும்.

2. ஆற்றை ஆக்கிரமித்து காடாக்கி வரும் வனத்துறையை ஆற்றிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

3. தனியார் ஆக்கிரமிப்புகள் குறு மண்-மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.

4. பாபநாசம் முதல் புண்ணைக்காயல் வரை எங்கும் கழிவு சாய்க்கடை நீர் ஆற்றுக்குள் வந்து கலக்காமலிருக்க நிலையான மாற்று வழியைக் கண்டறிந்து திட்டமிட்டு, கழிவு நீர் செயற்கை ஓடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

5. தாமிரபரணி ஆற்றிலிருந்து தூத்துக்குடி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கியதில் நடைபெற்றுள்ள ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், நிலுவையிலுள்ள தண்ணீர் கட்டணம் முழுவதையும் தண்ட (வசூலிக்க) வேண்டும்.

6. வெள்ளநீர்க்கால்வாய் என திட்டமிட்டு தற்போது தாமிரபரணி - கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம் என பெயர் மாற்றம் கண்டுள்ள திட்டத்தில் நிகழ்ந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. தாமிரபரணி ஆற்றுப் பாசன பகுதிகளான இரு மாவட்டங்களின் 87 ஆயிரம் நன்செய் நிலங்களின் இருபோக, முப்போக சாகுபடி உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

8. மருதூர் அணை, திருவைகுண்டம் அணைகளிலிருந்து இனி எந்த தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுப்பதை முற்றிலும் கைவிடவும், கங்கைகொண்டான் தொழிற்பேட்டை குறிப்பாக டாடா சோலார் தொழிற்சாலைக்கு மருதூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

9. தாமிரபரணி ஆற்றுக்குள் காடாக வளர்ந்து நீரோட்டத்திற்குத் தடையாக இருக்கும் சீமைக் கருவேல மாங்கள் உட்பட அனைத்து மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும்.

10.தாமிரபரணி தூத்துக்குடி) வடிநீர்க் கோட்டத்தின் அலுவலகத்தை திருவைகுண்டம் (புதுக்குடி) நீர்வளத்துறை வளாகத்தில் அமைத்து அவ்வளாகத்திற்கு முதுபெரும் தலைவர் விடுதலைப் போராட்ட பெரும் தியாகி ஐயா இரா.நல்லக்கண்ணு அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும்.

11.2023 திசம்பரில் தாமிரபரணி ஆற்றின் பெரும் வெள்ளத்தால் பேரிழப்புகளுக்குள்ளான வேளாண்குடி மக்களின் வேளாண்மை (விவசாய) கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

12.அதுபோல் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரிழப்புகளைத் தாங்க முடியாத நிலையில் தன் (சுய) உதவிக்குழுக்களின் தாய்மார்கள் தலையில் விழுந்துள்ள கடன் சுமைகளை (திருவைகுண்டம் -ஏரல், திருச்செந்தூர் வட்டங்களில்) முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அணு உலை எதிர்ப்பு போராளி சுப உதயகுமார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறியாளர் வெற்றி குமரன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் உமர் தென்மண்டல பொறுப்பாளர் ஜெரன்குமார், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பிறர் பிஸ்மி திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர் ராசிக் முஸாமில், திருவைகுண்டம் தொகுதி பொறுப்பாளர் மணி, 

தமிழர் விடுதலை களம் இயக்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மாரியப்பபாண்டியன்,  தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பரியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பரமசிவன், செயலாளர் ரமேஷ், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அருமைராஜ் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad