சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாட்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக பொருட்கள் மற்றும் சமூகத்திற்கான பயன்பாட்டு அறிவியல் என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் முதல் நாள் அன்று நடைபெற்ற தொடக்க விழாவில், கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து இப் பன்னாட்டு கருத்தரங்கின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி தலைமை உரை ஆற்றினார் . அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கருணாகரன் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கவிதா கருத்தரங்க நோக்க உரை ஆற்றினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா கலந்து கொண்டு ஆய்வு என்பது சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் இன்றைய சூழலில் மாணவர்கள் பெறுகின்ற கல்வி அவர்களை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் மாறாக மனப்பாடம் செய்ய வைப்பதாக மட்டும் இருக்கக் கூடாது என்றும் கூறி இன்றைய சமூகத்தில் அறிவியலின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாக இருப்பதால் அதற்கு இது போன்ற பன்னாட்டு கருத்தரங்கங்கள் மிகவும் அவசியமானவையாக இருக்கின்றன என்று தன் சிறப்புரையில் குறிப்பிட்டார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் முனைவர் சங்கர நாராயணன் கலந்து கொண்டு வரும் காலத்தில் சிலிக்கான், குவார்ட்ஸ், லித்தியம் போன்றவை இல்லாமல் வருங்கால தொழில்நுட்பம் இல்லை என்று குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். திருச்சிராப்பள்ளி ராமன் ஆய்வு மையத்தின் சார்பாக, கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இயற்பியல் துறை இணை பேராசிரியர் சுப்பு நன்றி கூறினார். பன்னாட்டு கருத்தரங்கில் இரண்டாம் நாள் அமர்விற்கு முனைவர் தெய்வமணி வரவேற்புரை ஆற்றினார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜோதிபாசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இப் பன்னாட்டுக் கருத்தரங்கின் பொருள் குறித்து சிறப்புரையாற்றினார். பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் முனைவர் பாஸ்கரன் மற்றும் பயோமி இயக்குநர் முனைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங்கில் மலேசியா பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ்காசி, கொரியப் பல்கலைக்கழக பேராசிரியர் ராமர் ராஜமாணிக்கம், பெங்களூர் இந்திய அறிவியல் கழக விஞ்ஞானி முனைவர் ரமேஷ், டெல்லி மத்திய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி முனைவர் விஜயன், கற்பகம் நிகர் நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மணிகண்டன், புருனோ சந்திரசேகர் மற்றும் காரைக்குடி சிக்ரி விஞ்ஞானி தமிழரசன், அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஜெயகாந்தன், ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் மாணவர்களின் சார்பாக மொத்தம் 156 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மேலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியுடன் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரியும், காரைக்குடி பயோமியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இக்கருத்தரங்கில் ஏராளமான பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை இயற்பியல் துறையின் இணைப் பேராசிரியர்கள் முனைவர் கருணாகரன் மற்றும் முனைவர் சுப்பு ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக