வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்காயம் செல்லும் அரசு நகரப் பேருந்துகள் நாளந்தோறும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதில் பள்ளி மாணவர்கள், பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர்.
இன்று காலை, வேப்பமரத்தச்சாலை பகுதியில், வழக்கம்போல் மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அந்த நேரத்தில் ஒரு அரசு நகரப் பேருந்து, மாணவர்களை ஏற்றாமல் சென்றது. இதைப் பார்த்த ஒரு இளைஞர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்த பேருந்தை தொடர்ந்து சென்றார்.
அப்போது, கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், தேர்வு எழுத செல்லும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், நிம்மியம்பட்டு கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். பேருந்து வந்தபோது, ஓட்டுநர் மாணவியை ஏற்றாது முன்விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தோல்வி அச்சத்தால் பதற்றமடைந்த மாணவி, பேருந்தின் படிக்கட்டை பிடித்து நீண்ட தூரம் ஓடினார். அந்த காட்சிகள் அருகிலிருந்த இளைஞர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து திருப்பத்தூர் போக்குவரத்து கழகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. பொது மேலாளர் கணபதி உத்தரவின் பேரில், வாணியம்பாடி கிளை மேலாளர் கணேசன், பேருந்து ஓட்டுநர் முனிராஜை பணிநீக்கம் செய்தார். அதேபோல், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நடத்துநர் அசோக்குமாரின் பணியும் நிறுத்தப்பட்டது.
பேருந்து சேவையில் இடையூறு ஏற்படாமல் இருக்க, புதிய ஓட்டுநராக ராமலிங்கம், நடத்துநராக ஹரிஹரன் நியமிக்கப்பட்டு, வழக்கம்போல் சேவை தொடரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்காலத்தில் இதுபோன்ற அலட்சியமான செயல்கள் மறுபடியும் நடைபெறாது என்று உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக