கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு இணங்க இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் சுதந்திரமாக சிந்திக்கவும் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என ஆராய்ந்து அறிவியல் மனப்பான்மையுடன் அறிவை வளர்த்துக் கொள்ளவும் அன்பு, பண்பு, ஒழுக்கம் மற்றும் அற நெறிகளுடன் ஒவ்வொரு மாணவர்களுக்கும் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அளித்து கல்வித்துறை வரையறுத்துள்ள கற்றல் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் தரமான கல்வியுடன் சிலம்பம், சதுரங்கம், அபாகஸ், நடனம் போன்ற கூடுதல் கலைத்திறன்களையும் வாழ்க்கை கல்வியையும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கற்றுக் கொள்ளும் வகையில் கற்பிப்பதோடு பள்ளி குழந்தை நேய பள்ளியாக திகழும் வகையில் செயல்படுவதோடு பள்ளி வளாகத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மைதானம், வாசிப்பை சுவாசமாக்கும் மாணவர்களுக்கான தனி நூலகம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கட்டடங்களுக்கும் ஒரு ஸ்மார்ட் போர்ட், மற்றும் கணினி வழியாக கல்வி கற்பித்தல், கிரீன் போர்ட், நோட்டீஸ் போர்டு, கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நவீன துணைக்கருவிகள், ஆளுமை திறன் வளர்க்க ஆடிட்டோரியம், விழிப்புணர்வு வாசகங்கள் படங்களுடன் கூடிய முழுமையான சுற்றுச்சுவர் கேட்-உடன் கூடிய நுழைவாயில், என்ற பாதுகாப்புச் சூழலுடன் சுற்றுப்புறத் தூய்மையுடன் பசுமை பள்ளியாக திகழும் வகையில் செயல்படுவதை இப்பள்ளியின் தர கொள்கையாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இதனை பி.எம்.கியூ.ஆர் எனும் நிறுவனம் நேரடியாகவும் இணைய வழியாகவும் மூன்று கட்டங்களாக ஆய்வும், தணிக்கையும் செய்து ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளுக்காக மாநில அளவிலான விருதுகளான அன்பாசிரியர் விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு பள்ளிக்கான விருது, மாநில எழுத்தறிவு விருது, நற்சிந்தனை நன்னடை பள்ளிக்கான விருது, பசுமை முதன்மையாளன் கிரீன் சாம்பியன் விருது, மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான கல்வி வள்ளல் காமராசர் விருது போன்ற பல்வேறு சிறப்புகளும் விருதுகளும் பெறுகின்ற அளவுக்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
மத்தூர் வட்டார கல்வி அலுவலர்களும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆசிரிய பயிற்றுநர்கள் கெரிகேப்பள்ளி தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவினர் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் அறம் விதை அறக்கட்டளையினர் அனைவரும் பாராட்டினர். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு இதே கெரிகேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட போதும் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக