குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு தண்ணீர் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு நீர் என்பதாகும். இந்த தலைப்பில் நீலகிரி மாவட்ட அளவில் 130 ஆய்வு கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 20 ஆய்வுக் கட்டுரைகள் எட்டு மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து பள்ளிகளை சேர்ந்த ஆய்வு கட்டுரைகள் மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் காங்கிரஸில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். கூடலூர் பகுதியைச் சேர்ந்த புளியம்பாரா அரசு உயர்நிலைப்பள்ளி, ஜிடிஎம்ஓ மேல்நிலைப்பள்ளி, கூடலூர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, எருமாடு நீலகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, குன்னூர் பகுதியில் உள்ள கேத்தி பாலடாவில் உள்ள என் எஸ் ஐயா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகியவை மாநில அளவில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். இத்தகைய சாதனை புரிந்த மாணவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே. ராஜு, மாவட்டத் தலைவர் தலைமை ஆசிரியர் சங்கர், மாவட்ட செயலர் தலைமை ஆசிரியர் மணிவாசகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவர்களை பாராட்டினார்கள். என் எஸ் ஐயா நினைவு பள்ளி மாணவிகள் புவனேஸ்வரி, பிருந்தா ஆகியோர் மேற்கொண்ட காட்டேரி அணை நீரை தூய்மைப்படுத்தும் கட்டுரை அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது. காட்டேரி அணைக்கட்டு சுற்றிலும் 40க்கும் மேற்பட்ட காரட் கழுவும் நிலையங்கள் அமைந்துள்ளன. அதிலிருந்து வரும் கழிவு நீர் அணையின் நீரை மாசுபடுத்துகிறது. இந்த நிலையில் காரட் கழுவும்போது வெளிப்படும் கழிவுகளை அகற்றும் நவீன கருவி ஒன்றை மாணவிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் கேரட்டின் சத்துக்கள் மீட்டெடுக்கப்படுவதுடன் நீரும் மாசுபடாத வகையில் இவர்கள் கண்டறிந்த கருவி செயல்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்று அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்போம் என மாணவிகள் உறுதி கூறுகின்றனர். இந்த சாதனை மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியர் குமார் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், தாளாளர் நாகேஷ், ஆங்கிலப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக