அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கவனமுடன் படித்து உயர் நிலையை எட்ட வேண்டும் : பேராவூரணி எம்எல்ஏ வாழ்த்து
பேராவூரணி, பிப்.24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டு தளங்களுடன் கூடிய 6 புதிய வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை ரூபாய் 2 கோடியே 44 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இதனை, தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். அப்போது பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றுகையில் மாணவ, மாணவிகளையும் அழைத்து சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்ற வைத்த செயல் மாணவ, மாணவிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடையே சட்டப்பேரவை உறுப்பினர் பேசும்போது, "கரிசவயல் பள்ளி கடந்த ஆண்டுகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளிலும் மாணவ, மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும். மேலும் மாவட்ட, மாநில அளவில் உயர் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். தேர்வுக்கு குறுகிய காலமே இருப்பதால் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் வழி" என அறிவுரை வழங்கினார்.
நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், கல்விப் புரவலர்கள் சுப.சேகர், இளங்கோ, அ.அப்துல் மஜீத், என்.எஸ்.சேகர், வட்டாரக் கல்வி அலுவலர் கே.கலா ராணி, பள்ளி தலைமையாசிரியர் (பொ) கே.பழனிதுரை, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எம்.சதீஷ்குமார், உதவி பொறியாளர் பி.பிரவீன்குமார், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள், மாணவ, மாணவிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக