'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
இத்திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டித்தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காகவும், ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்து தருவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. அதேநேரம் யாராவது தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால் ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கியுள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகள் அனைத்தும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் ஏற்கனவே, ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், ரூ.400 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பின்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 59 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 300 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1276 குடிசைகள் என மொத்தம் 1673 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகள் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்பொழுது 2024-25 ஆம் நிதியாண்டிற்கு 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1673 வீடுகள் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டுவதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு அதற்குரிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரிடையாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1673 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தரைமட்ட நிலை முடிவுற்று ஏனைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 1673 வீடுகள் தரைமட்ட நிலை முடிவுற்றதற்கான தொகை, 1583 வீடுகள் ஜன்னல் மட்ட நிலை முடிவுற்றதற்கான தொகை, 1215 வீடுகள் கூரை வேயப்பட்ட நிலை முடிவுற்றதற்கான தொகைகள் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள வீடுகளுக்கான தொகைகள் அந்தந்த நிலைகள் முடிவுற்ற பின்னர் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக