மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம் - மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக்.
மதுரையை பொறுத்த வரை மிகப் பழமையான நகரம் மட்டுமின்றி தமிழ் மொழிக்கான இதயமும் கூட. நகரத்தின் பாரம்பரியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே 5.5 கி.மீ. தூரத்தை நிலத்தடியின் கீழ் கொண்டு செல்கிறோம். மதுரையில் மிகப் பாரம்பரியம் என்று எடுத்துக்கொண்டால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். ஆகையால் அந்த கோவிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் பேட்டி.
மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'மதுரை மாநகர மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 32 கி.மீ. தூரத்தில் 26 ரயில் நிறுத்தங்களை கொண்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையோடு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதல் வருங்காலத்தில் கிடைக்கும் என நம்புகிறோம்.
இதற்கிடையே இந்தத் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் குறிப்பாக நிலம் கையகப்படுத்தல், மின் வழித்தடம், தண்ணீருக்கான வசதி போன்றவற்றுக்கான முன் நடவடிக்கை மேற்கொள்வதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறையில் தான் உள்ளது. தாமதம் எதுவும் இல்லை. மத்திய அரசை பொருத்தவரை நகர்ப்புற வீட்டு வசதித்துறை, நிதி ஆயோக், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆலோசனைக்கு பிறகுதான் ஒப்புதல் வழங்க முடியும்
பொதுவாக மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் இந்த திட்டத்திற்கான அடுத்த கட்டப் பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும். மதுரையை பொறுத்த வரை ஏறக்குறைய 5.5 கி.மீ. தூரம் நிலத்தடியின் கீழ் பாதை அமைக்க வேண்டி உள்ளது. மீதமுள்ள 26.5 கி.மீ. தூரம் நிலத்தின் மேற்புறத்தில் அமைக்கப்பட உள்ளது. பொதுவாக நிலத்தடியின் கீழ் அமைக்கப்பட உள்ள ரயில்வே பாதை நான்கிலிருந்து நான்கரை ஆண்டுகள் ஆகும். நிலத்தில் அமைக்கக்கூடிய ரயில் பாதைக்கான பணிகள் மூன்றில் இருந்து மூன்றரை ஆண்டுகள் ஆகும். இந்தப் பணிகளில் நிலம் கையகப்படுத்தல் தான் அதிக காலங்களை பிடிக்கும். தற்போது கோயம்புத்தூரிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கான மெட்ரோ ரயில் ஒரே திட்ட அறிக்கையாகத் தான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்த வரை மிகப் பழமையான நகரம் மட்டுமின்றி தமிழ் மொழிக்கான இதயமும் கூட. நகரத்தின் பாரம்பரியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே 5.5 கி.மீ. தூரத்தை நிலத்தடியின் கீழ் கொண்டு செல்கிறோம். மதுரையில் மிகப் பாரம்பரியம் என்று எடுத்துக்கொண்டால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். ஆகையால் அந்த கோவிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை என்ன விதிகளை வகுத்துள்ளதோ அதன் அடிப்படையில் தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தை துளையிட்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதால் இதில் வேறு எந்த ஆபத்தும் வாய்ப்பில்லை. பாதுகாப்பாக இருக்கும்.
ஏற்கனவே திட்டமிட்ட வழித்தடத்தில் தான் மெட்ரோ ரயில் பாதை உருவாக்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போது மதுரை ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் மெட்ரோ ரயில் பணிகளை எந்த விதத்திலும் பாதிக்காது. அது குறித்து ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுமா என்பது குறித்து தான் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மெட்ரோ ரயிலுக்கான ரயில்கள் மற்றும் சிக்னலிங் சிஸ்டம் உருவாக்குவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் கோயம்புத்தூர் மதுரை இரண்டு மெட்ரோ திட்டங்களையும் ஒரே திட்ட அறிக்கையாக நான் சமர்ப்பித்துள்ளோம். ரயிலும் சரி சிக்னலிங் சிஸ்டமும் சரி பொதுவான அடிப்படையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதால் பணிகள் விரைவுபடுத்தப்படும். மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை மெட்ரோ வழித்தட பாதை என்பது பொதுவான மாஸ்டர் பிளானின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும்போது பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது அது போலவே மதுரையில் இருக்கும் என நம்புகிறோம்' என்றார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா முன்னிலையில் மதுரை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைப் பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டி.லிவிங்ஸ்டன் எலியேசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், இ.ஆ.ப.,, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மோனிகா ரானா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் என்.ராகவேந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், இ.ஆ.ப., உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக