கடந்த 2021 ஆம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியராக பொறுப்பேற்ற ரிஷப் பெரியகுளம் ஆண்டிபட்டி தேனி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு தரிசு நிலங்கள் தனிநபருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், இது தொடர்பாக இரண்டு கோட்டாட்சியர்கள், இரண்டு வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்,இரண்டு நில அளவையர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 2018 முதல் 2020 ஆண்டுகளில் கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள 12 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன், கணிப்பிரியா, வனிதா ஆகிய மூன்று பேரும் அவர்கள் பணிபுரிந்த கால கட்டங்களில் சட்டவிரோதமாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு மூன்று கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தேனி மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து மூன்று கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைமறைவான நிலையில், இன்று தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கிராம நிர்வாக அலுவலர் கணிப்பிரியா சரணடைந்தார்.
இதனை அடுத்து அவரை விசாரித்த நீதிபதி அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கணிப்பிரியாவை காவல்துறையினர் நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக