நெமிலி அருகேவாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாமக மறியல்!
ராணிப்பேட்டை ,ஜன 18 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாயைச் சேர்ந்தவர் சூரியா (எ) தமிழரசன் (வயது 23) அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகணபதி (வயது 22). இருவரும் டிரைவர்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாலை கிரிக்கெட் விளையாடி விட்டு நண்பர்களுடன் வந்தனர். அப்போது திருமால்பூர் பகுதியை சேர்ந்த பிரேம் (வயது 24) உள்ளிட்ட 4 பேர் அந்த இடத்திற்கு வந்தனர். ஏற்கனவே இவர்களுக்கு இடையே முன்பகை இருந்த நிலையில் மீண்டும் சூரியா (எ) தமிழரசன், விஜயகணபதி உள்ளிட் டோரிடம் பிரேம் தரப்பினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அது கைகலப்பாக மாறி கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து பிரேம், அந்த வழியாக வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்த நபரை மடக்கி, பெட்ரோல் கேனை பிடுங்கி, சூரியா (எ) தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து பிரேம் உள்ளிட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தீப்பற்றி எரிந்ததால் அலறிய வாலிபர்களை, அங்கிருந் தவர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தீக்காயமடைந்த 2 வாலிபர்களின் உறவினர்கள் நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் பனப்பாக்கம்-பள்ளூர் ரோட்டில் அமர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்
என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிரேம் என்பவரை போலீசார் கைது செய்தனர். நேற்று, நெமிலி பஸ் ஸ்டாண்டில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர். சரவணன், நெமிலி யூனியன் துணை சேர்மன். தீனதயாளன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர். கதிரவன் உள்ளிட்டோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் திரண்டு, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏடி.எஸ்.பி குணசேரன், டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் 2 மணி நேரம் கழித்து பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு நெல்வாய், திருமால்பூர், நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர். மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக