தமிழர்களின் பண்டிகைகளில் முதன்மையான பண்டிகை பொங்கல் திருநாள் ஆகும். இதில் செங்கரும்பு பொங்கல் விழாவில் படைக்கும் முக்கிய பொருளாக உள்ளது. இந்த கரும்பு பயிர் பத்து மாத பயிராக உள்ளது. இந்த கரும்பை பொங்கலுக்கு அறுவடை செய்யும் விதத்திலேயே நடவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகள், அம்மாவட்டத்தில் சாகுபடி போதுமானதாக இல்லாத காரணத்தால் பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது.
செங்கரும்பு சாகுபடி செய்வதன் மூலம் நல்ல லாபமும், செங்கரும்பிற்கு நல்ல தேவைகளும் இருப்பதால் இதனை திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்ய முன் வர வேண்டும். மேலும், தற்போது தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கு தேவையான 3,30,000 கரும்பிற்கு நமது மாவட்டத்தில் 65000 கரும்புகள் மட்டுமே தயார் நிலையில் உள்ளது. எனவே, அதிக அளவில் ’செங்கரும்பு’ சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்., இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொங்கல் கரும்பின் தேவையுள்ளதால், சாகுபடி செய்யும் அனைவருக்குமே நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் செங்கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான மானிய திட்ட உதவிகள், இயந்திரம், பயிற்சிகள் போன்றவற்றை கண்டறிந்து வழங்கிட வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்யப்பட உள்ள கரும்பு தோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.01.2025) பார்வையிட்டு கரும்பின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தார்.
முதல் விற்பனையாக தோரணம்பதி கிராமத்தினை சார்ந்த விவசாயி திரு.சிவராஜ் அவர்களிடமிருந்து கரும்பை உரிய விலை கொடுத்து பெற்று கொண்டார். இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் திரு.ஆர்.சீனிராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ராகினி, உதவி வேளாண்மை அலுவலர், உள்ளாட்சி பிரிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக