விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) வழங்குதல் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) வழங்குதல் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.

photo_2025-01-07_22-07-30

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது. 2024-2025 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 35 எண்கள் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) 35 எண்கள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது.


தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம், விசைக் களையெடுப்பான் கருவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம், அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், இத்திட்டத்தில் ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுப் பிரிவைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் விசைக் களை எடுக்கும் கருவிக்கு (பவர் வீடர்) வழங்கப்படுகிறது.


மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் பெறுவதற்கு உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, சிவசக்தி நகர், புதுப்பேட்டை ரோடு, திருப்பத்தூர் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்டஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad