தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு 7,78,296 குடும்ப அட்டைதாரர்களுக்கு பன்னீர் கரும்பு வழங்குவதற்காக கோரணப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு விளைச்சல் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்புடன் கூடிய பொங்கள் பரிசு தொகுப்பினை அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமாக 09.01.2025 முதல் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 30.11.2024 தேதியில் நடைமுறையில் உள்ள 7,77,868 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 428 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களும் சேர்த்து ஆக மொத்தம் 7,78,296 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பன்னீர் கரும்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக 7,78,296 குடும்ப அட்டைதாரர்களுக்கு முழுக் கரும்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களான வேளாண் அலுவலர், கூட்டுறவுத்துறை கள அலுவலர், பொது விநியோகத்திட்ட சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய வட்டார அளவிலான 14 கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு விவசாமிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இதர மாவட்ட அலுவலர்களும் கடலூர் மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் செய்யலாம். எனவே, விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்யவரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த மாவட்டத்திற்கு தங்களிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகின்றன போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
கரும்பு கொள்முதல் செய்யும்போது நமது மாவட்டத்தில் விளையும் கரும்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு வட்டார அளவிலான கொள்முதல் குழுவும் இணைப்பில் கண்டுள்ள கொள்முதல் படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து, அதன் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஒரு கிராமத்தில் ஒரே விவசாயிடமிருந்து ஒட்டுமொத்த கொள்முதலையும் மேற்கொள்ளாமல் மாறாக அந்த கிராமம் முழுவதிலும் இடைத்தரகர்கள் மூலமின்றி பரவலாக கரும்பின் தரத்தின் அடிப்படையில் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமலும், மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனை விட கூடுதலாக இருக்கவும், மேலும் நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக்கூடாது. கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் துவக்கத்திற்கு ஏற்ப கொள்முதல் பணியினை முன்கூட்டியே முடித்திட நடவடிக்கை எடுக்கவும், எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்து, கரும்பு குடும்பு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகளை எவ்விட புகார்களுக்கும் இடமளிக்காமல் விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக