ஆண்டிப்பட்டியில் 23 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி நெசவாளர்கள் நடைபயணமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்களில் 4000 மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் நெசவாளர்களுக்கும் இடையேயான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவுற்றது. புதிய கூலி உயர்வு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாத தொடக்கத்தில் இருந்து நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 23 வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நெசவாளர்கள் வருவாய் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவாளர்கள் தெருவில் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி போராட்டத்தை நடத்தினர். திண்டுக்கல் தொழிலாளர் நல துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறி டி.சுப்புலாபுரத்தில் இருந்து பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே சென்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்கள் ஊர்வலத்தை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த நெசவாளர்கள் தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகர்புறங்களில் 100க்கும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் போராட்டத்தால் ஆண்டிபட்டி நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக