பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்


பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்


ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள்  நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை.


ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும்.  வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.


சரி, இவற்றை செய்பவர்களுக்கு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 சொல்லும் நடவடிக்கைகளைப் பற்றி பார்ப்போம்


தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992


Tamilnadu Property (prevention of Damage &Loss) Act,1992


சட்ட எண்: 59/1992


*பொருள் வரையறைகள்- (பிரிவு 2)*


“அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.


“கேடு” (Mischief) என்பது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 425 ஆம் பிரிவின் உள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்;


“அரசியல் கட்சி” என்றால், 1968-ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் அளிப்பு) ஆணையின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி என்று பொருள்படும்;


“சொத்து” என்றால், கீழ்க்குறித்துள்ளவற்றில் ஏதொன்றுக்கும் சொந்தமான அல்லது அதன் உடைமையிலுள்ள அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள அசையும் அல்லது அசையாச் சொத்து அல்லது இயந்திரம் எதுவும் என்றும் பொருள்படும்.


மத்திய அரசு; அல்லது

மாநில அரசு; அல்லது


உள்ளூர் அதிகார அமைப்பு ஏதொன்றும்; அல்லது தமிழ்நாடு மாநில மின்சார வாரியம்; அல்லது இந்த மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஏதொன்றும்; அல்லது 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்திக் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டுள்ள, ஒரு நிலவள வங்கி உள்ளடங்களாக, 


கூட்டுறவுச் சங்கம் ஏதொன்றும்; அல்லது நாடளுமன்றத்தாலோ அல்லது இந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையாலோ நிறைவேற்றப்பட்ட சட்டம் ஏதொன்றின்படியேனும் அமைத்துருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனம் ஏதொன்றும்; அல்லது, மத்திய அரசு அல்லது மாநில அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏதொன்றும்; அல்லது


ஏதேனும் நிலையம், வணிக அமைப்பு அல்லது தொழில் நிறுவனம்; அல்லது ஏதாவது நிறுவனம்


விளக்கம்: இந்தக் கூற்றின் படி “நிறுவனம்” என்பது ஏதேனும் கூட்டமைப்பு எனப் பொருள்படும் மற்றும் இதில் பொறுப்பாட்சி, நிறுவனம், சங்கம் அல்லது தனி ஆட்களைக் கொண்ட கழகம் உள்ளடங்கும்.


சொத்தைப் பொறுத்த அளவில் கேடு செய்வதற்கான தண்டனை (பிரிவு 3)


சொத்து எதனையும் பொறுத்த அளவில், செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்து, அதன் மூலம் அத்தகைய சொத்திற்கு நூறு ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையளவிற்குச் சேதம் அல்லது 


இழப்பை விளைவிக்கின்ற அல்லது, எந்த நோக்கத்திற்காகவேனும் பொதுமக்களுக்கோ அல்லது நபர் எவருக்குமோ தண்ணீர் வழங்கும் அளவைக் குறைத்தலையோ, அல்லது 


பொது வடிகால் ஏதேனும் வழிந்தோடுதலையோ அல்லது அதற்குத் தடங்கலையோ விளைவிக்கின்ற அல்லது பெரும்பாலும் விளைவிக்கக்கூடும் என்று தாம் அறிகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற அல்லது


பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப்போக்கு வரவுக்குரிய கால்வாய் எதனையும் பயணஞ் செய்வதற்கோ அல்லது பாதுகாப்பு குன்றியதாக ஆக்குகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற எவரொருவரும் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.


வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது, போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனும் இருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு ஓராண்டிற்கும் குறைவானதொரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.


தீ அல்லது வெடிபொருள் மூலமாகப் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கின்ற கேடு: (பிரிவு 4,)


சொத்து எதற்கேனும் நூறு ரூபாய் அல்லது அதற்கு மேம்பட்ட தொகையின் அளவிற்குச் சேதம் விளைவிக்கும் உட்கருத்துக்கொண்டோ, அல்லது தன்செயலின் மூலம் தான் சேதத்தைப் பெரும்பாலும் அதற்கு விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்தோ, தீ அல்லது வெடிப்பொருள் எதனின் மூலமாகவேனும் கேடு செய்கின்ற எவரொருவரும் இரண்டாண்டுகளுக்குக் குறைவானதாக இருக்கக்கூடாத, ஆனால் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு காலளவிற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும்  விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/