தூத்துக்குடி மாவட்டம், ஜன.30, ஏரல் வட்டம், நாசரேத் அருகே ஞானராஜ் நகரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனம் சிக்கிக் கொண்ட விவரம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பிரபல செய்தி சேனல்களிலும் வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது நாளை (திங்கள்கிழமை) உடனடியாக அந்த வேலையை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜல்லி கற்கள் அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் எவ்வித பணியும் முழுமை பெறவில்லை.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு - பின்வரும் கதைக்கும் யாதொரு சம்பவத்துக்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை, இதை யார் மனதும் புண்படுத்த அல்ல என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனையே.
சிறுகதை:
ஒரு நாள் சாலை ஓரத்தில் இருவர் வேலை செய்து கொண்டிருந்தனர் இதனை சற்று தூரத்தில் இருந்து ஒருவர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சில மணி நேரமாக அந்த பணிகள் நடந்து கொண்டே இருந்தது, இவரும் அதனை கண்காணித்துக் கொண்டே இருந்தார்.
பிறகு அவர் எழுந்து சென்று வேலை செய்து கொண்டிருந்தவர்களின் அருகில் சென்று அவர்களை வினவ தொடங்கினார்.
ஒரு நபர்: ஐயா தாங்கள் இருவரும் செய்து கொண்டிருப்பதை நான் சில மணி நேரமாக நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள் என்று எனக்கு சற்றும் விளங்கவில்லை எனக் கூறினார்.
வேலை செய்கின்றவர்கள்: சற்றும் தாமதிக்காமல், ஐயா எனக்கு கொடுக்கப்பட்ட பணி குழி தோண்டுவது, மற்றொரு நபருக்கோ, தான் தோண்டிய குழியை மூடுகின்ற பணி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் இருவரும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நாங்கள் சரிவர செய்து வருகிறோம் இதில் என்ன தவறு உள்ளது? இதில் தங்களுக்கு என்ன புரியவில்லை என கூறினர்.
ஒரு நபர்: எதற்கு ஐயா இந்த குழி தோண்ட வேண்டும்? எதற்கு தோண்டிய குழியை மீண்டும் மூட வேண்டும் என்று மறுபடியும் கேள்வி எழுப்பினார்.
வேலை செய்கின்றவர்கள்: ஐயா நாங்கள் இருவரும் அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் கொடுக்கின்ற பணியை செய்வதே எங்கள் தலையாயக் கடமை என மீண்டும் பதில் கூறினர்.
ஒரு நபர்: அது சரிதான் ஆனால் நீங்கள் குழியை தோண்டுவதால் என்ன பயன்? மற்றொருவர் அதை மூடுவதால் என்ன பயன்?
வேலை செய்கின்றவர்கள்: ஐயா தாங்கள் கேட்பது சரிதான், ஐயா நாங்கள் மூன்று பேர் வேலை செய்ய வந்தோம், வரும் வழியில் மூன்றாம் நபருக்கு அவசர பணி காரணமாக வேறு இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டது. அதனால் அவர் வரவில்லை.
ஒரு நபர்: அதற்கும் தாங்கள் செய்யும் பணிக்கும் என்ன சம்பந்தம்?
வேலை செய்கின்றவர்கள்: ஐயா எங்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட பணியை நாங்கள் சரியாக செய்கிறோம், அந்த மூன்றாம் நபர் செய்ய வேண்டிய பணி மரக்கன்றுகள் நடுதல், அவர்தான் அந்த பணியை செய்ய வேண்டும் என விளக்கி கூறினர்.
ஒரு நபர்: இப்போதுதான் தனக்கு புரிகிறது அரசு வேலை என்றால் என்ன என்பது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக