தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பழுதடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டும் என புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பீட்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது,
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்வதற்கு உப்பாற்றிற்கு நடுவில் பழமையான பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் வழியே, புதுக்கோட்டை, கூட்டாம்புளி, குலயன்கரிசல், சேர்வைகாரன் மடம், சாயர்புரம் உள்ளிட்ட சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வந்தன.
தற்போது இந்த பாலம் பழுதடைந்து நிலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் சென்று கொண்டிருக்கிறது. இதனால், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் சரிவர புதுக்கோட்டை நகர் பகுதிக்குள் வந்து செல்வதில்லை.
புதுக்கோட்டை பயணிகள் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விடப்படுகின்றனர். இதனால், பயணிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஊருக்குள் வரும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இதனால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, 100 ஆண்டுகள் பழமையான பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, பொது மக்களின் நலன் கருதி அரசு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக