சினிமா பாடல்கள், குத்து பாடல்கள் மற்றும் இரட்டை அர்த்தம் உள்ள பாடல்கள் பாடி ஆட தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மேல்முறையீடு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 அக்டோபர், 2023

சினிமா பாடல்கள், குத்து பாடல்கள் மற்றும் இரட்டை அர்த்தம் உள்ள பாடல்கள் பாடி ஆட தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மேல்முறையீடு.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


நவராத்திரி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி 48 நாட்கள் விரதம் இருந்து வேண்டுதல் செய்வர், ஆதிவாசி, பெண், காளி, சிவன், விஷ்ணு, முருகன், எமன், அனுமன், காவலர் போன்று அவரவர்களுக்கு பிடித்த வேடங்கள் அணிந்து விரதம் இருப்பார்கள். 


விரதம் இருப்பவர்கள் வீட்டில் கூட தங்க மாட்டார்கள். விரதத்தை பூர்த்தி செய்யும் நாள் அன்று 10 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வருவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து கோவிலில் அந்த வசூல் பணத்தை ஒப்படைப்பது வழக்கம். 


நாளடைவில் பல பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக பராம்பரிய நடனங்களுக்கு ஆடிப் பாடி காணிக்கை பெற்று வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அதிகப் பணம் வசூல் செய்ய வேண்டி சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளை கொண்டு சினிமா பாடல்கள், குத்து பாடல்களுக்கும் இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களுக்கும் நடனம் ஆட ஆரம்பித்தனர். 


அவற்றை பொது மக்களுடன் சேர்ந்து விரதம் இருப்பவர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். இது தொடர்பாக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த வழக்கில் 2017ம் ஆண்டு ஆபாசமாக மற்றும் அருவருப்பான அங்க அசைவுகளுடன் கூடிய நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆன்மீக நிகழ்ச்சியான தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடுவது தொடர்ந்தது.


கடந்த 2022ல் மீண்டும் மேற்படி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் சில கட்டுப்பாடுகளை மாண்புமிகு உயர் நீதிமன்றம் விதித்தது. தொடர்ந்து ஒரு தசரா குழுவினர் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் தசரா வின் போது சினிமா மற்றும் டிவி நடிகைகளை பங்கு கொள்ள கலாச்சார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் அனுமதி பெற்றனர். 


கடந்த 2022 ஆண்டும் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் சினிமா பாடல்கள், குத்து பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். இது பராம்பரிய விரதத்தின் மாண்பை, கீர்த்தியை சீர்குலைப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள். மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஏற்கனவே இரட்டை அர்த்த பாடல்கள் மற்றும் குத்து பாடல்களுக்கு தடை விதித்த நிலையிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கோவிலுக்கு உரிய நிகழ்வுகள் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தசரா நிகழ்ச்சியில் மறைமுகமாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஏதிராக செயல்படுவதை தடுக்கும் விதமாக தசரா குழுக்கள் பக்திப் பாடல்கள் அல்லாது சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்கள், குத்து பாடல்கள், கானா பாடல்களை கலாச்சார விழா என்ற பெயரில் நடத்துவதை தடை செய்ய உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பா. இராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொது நல வழக்கு 04.09.2023 அன்று மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. 


அப்போது மாண்புமிகு நீதிபதிகள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ததுடன் இனி ஆபாசமாக ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர். அதனை எதிர்த்து குலசேகரன்பட்டினம் தசரா சார்ந்த நிகழ்ச்சிகளிள் பக்தி பாடல்கள் அல்லாத சினிமா பாடல்கள், குத்து பாடல்கள் மற்றும் இரட்டை அர்த்தம் உள்ள பாடல்கள் பாடி ஆட தடை விதிக்க கோரி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் 16.10.2023 அன்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/