கருங்குளம் - அரசு பள்ளியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள சீருடைகள், புத்தகப்பைகள் எரிந்து சாம்பலானது.! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

கருங்குளம் - அரசு பள்ளியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள சீருடைகள், புத்தகப்பைகள் எரிந்து சாம்பலானது.!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் உள்ளது. ஓட்டு மேற்கூரையாலான இந்த கட்டிடத்தில் கருங்குளம் யூனியனில் உள்ள 86 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச சீருடைகள், புத்தகப்பைகள் மற்றும் மாணவர்களிடம் இருந்து வாங்கிய பழைய புத்தகங்களும் வைக்கப்பட்டு இருந்தன.


சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் வழக்கம்போல் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அப்போது பழைய கட்டிடத்தில் இருந்த சீருடைகள், புத்தகப்பைகள், புத்தகங்கள் போன்றவற்றில் திடீரென்று தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.


அப்போது காற்று பலமாக வீசியதால் அந்த கட்டிடம் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள பனங்கட்டைகளும் தீப்பிடித்து எரிந்ததால் ஓடுகளுடன் திடீரென்று சரிந்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த  ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து,bநீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பழைய கட்டிடத்தில் இருந்த 86 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7,528 இலவச சீருடைகள், 3,878 இலவச புத்தகப்பைகள் மற்றும் பழைய புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. சேதமடைந்த கட்டிடத்தை மாவட்ட கல்வி அலுவலர் ரமா, தாசில்தார் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால், அருகில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. 


இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/