குமரியில் போராட்டம் நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்க முடிவெடுத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 அக்டோபர், 2023

குமரியில் போராட்டம் நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்க முடிவெடுத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.


குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குற்றத்தடுப்பு மற்றும் நிர்வாக சீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்துமாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 


அப்போது மாவட்டங்களில் நடந்து வரும் நிர்வாக திறன், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பற்றி விவாதிக்கப்பட்டது.மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் குமரி மாவட்டத்தில் மிக, மிக குறைவாக உள்ளது என அரசு தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் குமரி மாவட்டத்தில் அதிகமாக நடைபெறும் 3 குற்றச்சம்பவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 


அதாவது முதலில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி, இரண்டாவதாக நில மோசடி மற்றும் 3-வதாக குடும்ப பிரச்சினை மற்றும் வரதட்சணை கொடுமைகள் ஆகும். அவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வேலை வாங்கி தருவதாக நடைபெறும் மோசடியை தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டப்படும் விளம்பர சுவரொட்டிகள், ஆன்லைன் விளம்பரங்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் சேகரித்து அது உண்மையா?, போலியான நிறுவனங்களா? என கண்காணிக்க மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தனியார் வேலை வாய்ப்பு வழங்கும் முகாம் ஒன்று நடந்தது. உடனே தகவல் அறிந்துஅறிந்த தனிப்படையினர் இதுபற்றி விசாரணை நடத்த ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் போலீசார் செல்வதற்குள் முகாம் நடத்துபவர்கள் தப்பி சென்றனர். இதன்மூலம் 12 பேரிடம் இருந்து பணமோசடி தடுக்கப்பட்டது.2-வதாக நில மோசடியை தடுக்க ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, கிராம நிா்வாக அதிகாரிகள், பத்திரப்பதிவு துறை, போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் நிலமோசடி சம்பந்தமாக உடனே தீர்வு காண சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது.


இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்த படியாக குடும்ப பிரச்சினை மற்றும் வரதட்சணை வழக்குகள் மக்கள் நீதிமன்றம் மூலமும், போலீஸ் நிலையங்கள் மூலமும் சுமூக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த 3 குற்றங்களும் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 45 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் 34 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 19 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளது. 


கடந்த ஆண்டு நகை பறிப்பு,திருட்டு என 74 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டு இதுவரை 41 வழக்குகள் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க பெண் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக தண்டனை வாங்கி கொடுக்கவும் தனிப்படை விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்கவும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் தொடர்புடைய 180 பேரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.தொடர் கஞ்சா வழக்கில் கைதாகும் நபர்கள் மீது குண்டா் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குலசேகரத்தில் மருத்துவ மாணவியின் தற்கொலை வழக்கு தொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய விசாரணை நடத்தி விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


- கன்னியாகுமரி செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/