திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா: ஷண்முகர் பச்சை சாத்தி அலங்காரத்தில் வீதி உலா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா: ஷண்முகர் பச்சை சாத்தி அலங்காரத்தில் வீதி உலா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா 8வது நாளில் சுவாமி ஷண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.


உலகப் புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 


திருவிழா 12 நாட்களிலும் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எட்டு வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். திருவிழாவின் 8வது நாளான இன்று ஷண்முகர் அதிகாலை 5 மணிக்கு பிரம்மாவின் அம்சமாக வெள்ளை சாத்தி அலங்காரத்தில் ஷண்முகர் எழுந்தருளினார்.

 

பின்னர் ஷண்முகருக்கு 24 வகையான விஷேச அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் ஷண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணுவின் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பக்தர்கள் ஷண்முகருக்கு பச்சை நிற பட்டு மற்றும் மரிக்கொழுந்து, துளசி மாலையும் செலுத்தி ஷண்முகரை தரிசனம் செய்தனர். 


ஷண்முகர் 4 ரதவீதிகளிலும் 4 உள்மாட வீதிகளிலும் வலம் வந்து திருச்செந்தூா் முருகன் கோவிலை சென்றடைந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/