கன்னியாகுமரியில் கலங்கரை விளக்க தினம் கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

கன்னியாகுமரியில் கலங்கரை விளக்க தினம் கொண்டாட்டம்.

இந்தியாவில் 182-க்கும் மேற்பட்ட கலங்கரை விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் முதல் கலங்கரை விளக்கம் 1796-ம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மகாபலிபுரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மணப்பாடு, முட்டம், கன்னியாகுமரி உள்பட பல பகுதிகளில் கலங்கரை விளக்கம் ஏற்படுத்தப்பட்டன. 


கன்னியாகுமரியில் புதிய பஸ்நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் அமைந்து உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் தரைமட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்திலும் அமைந்து உள்ளது. கடற்கரைப் பகுதியில் இருந்து 29 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 


இந்த கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு ஏறிச் செல்வதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் 6.30 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் பயணிகளுக்கு ரூ.10-ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.25-ம், சிறுவர்களுக்கு ரூ.5-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையில் மும்பை யில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கப்பல்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 2012-ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கத்தில் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் நவீன"ரேடார்"கருவி பொருத்தப்பட்டு உள்ளது. 


மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி நின்று பார்ப்பதற்கு வசதியாக "லிப்ட்" வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1927-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட கலங்கரை விளக்கம் பாதுகாப்பு சட்டத்தின் படி ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி இந்திய கலங்கரை விளக்க தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி யில் உள்ள கலங்கரை விளக்கத்தில் 96-வது இந்திய கலங்கரை விளக்க தினம் கடை பிடிக்கப்பட்டது. 


இதையொட்டி சுதந்திரக் கொடி மற்றும் கலங்கரை விளக்கதுறையின் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி பிரகாஷ் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து பேசினார். கலங்கரை விளக்க தொழில் நுட்ப உதவியாளர்கள் சுரேஷ், வினோத்குமார் ஆகியோர் கலங்கரை விளக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசினார்கள். 


இந்த நிகழ்ச்சியில் கலங்கரை விளக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த கலங்கரை விளக்கத்தில் "லிப்ட்" வசதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 24 ஆயிரத்து 127 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். இதில் 120 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவார்கள். கலங்கரை விளக்கு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் இன்று இலவச மாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.


- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/