தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி அன்னை எஸ். பி மஹாலில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் இன்று (26.09.2023) நடைபெற உள்ள 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று (25.09.2023) ஆறுமுகநேரி அன்னை எஸ். பி. மஹாலில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பாதுகாப்பு பணியில் 5 காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 62 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி நினைவு நாளிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தென்காசி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக