நரிக்குடி - திருச்சுழியில் சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்களை அமைச்சர தங்கம் தென்னரசு வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

நரிக்குடி - திருச்சுழியில் சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்களை அமைச்சர தங்கம் தென்னரசு வழங்கினார்.


விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பின் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீதனப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்..  சீதனப் பொருட்களை  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் .தங்கம் தென்னரசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்  மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 


நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும். 


ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக  முக்கியமான  காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான். அந்த  சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டும் முக்கியமான காரணிகளாக  இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு இரண்டு ஆண்டு காலத்திலே நாட்டினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய இந்த இரண்டு பெரும் காரணிகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை தந்திருக்கிறார்கள்.


படிப்பு, எழுத்தறிவு பெற்று இருக்கின்ற சமுதாயம் தான், பிற்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு போய் நல்ல நிலைமைக்கு வருகிறார்கள். அதனால், பொருளாதார நிலை உயர்கிறது. திருச்சுழி தொகுதி மக்களின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான பல ஆண்டு கோரிக்கையினை நிறைவேற்றி தந்துள்ளது தமிழக அரசு. கர்ப்பிணித்தாய்மார்கள் அடுத்த ஒரு தலைமுறையை இந்த நாட்டுக்கு அளிக்கிறீர்கள். நாம் ஒரு குழந்தையை பெறுகிறோம் என்றால், அந்த குழந்தை வீட்டுக்கு மட்டுமல்ல, நீங்கள் பெறக்கூடிய குழந்தையானது நாட்டுக்காகவும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.


அப்படி நாட்டுக்காக ஒரு குழந்தையை பெற்றெடுத்து அர்ப்பணிக்க கூடிய தாய்மார்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தால்தான் பெறக்கூடிய குழ்ந்தை ஆரோக்கியமாக இருக்கும். அந்த குழந்தை ஆரோக்கியமாக பிறந்தால் தான் இந்த நாடு நன்றாக இருக்கும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நீங்கள் பெறக்கூடிய அந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பெரிய நன்மையை நீங்கள் செய்கிறீர்கள் என கூறுகிறார். அந்தப் பெண் குழந்தையை வளர்க்கக்கூடிய கடமை தாய்மார்களுக்கு இருப்பதைப் போல அரசாங்கத்திற்கும் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் அடிப்படையாகஇருப்பது குடும்பம். அந்த குடும்பத்தை பேணி காத்து, இந்த சமுதாயத்தை வளர்த்தெடுப்பது பெண் தான்.


எனவே தான், தமிழ்நாடு அரசு பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்கான பேருந்து பயணம் திட்டம் வீட்டில் இருக்கும் பெண்களை வெளியில் கொண்டு வர வேண்டும், உங்களுக்கான பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.


அடுத்ததாக மகளிர் உரிமை திட்டம் மூலம் ஒரு குடும்பத்தை உருவாக்கி, அந்த குடும்பத்தினுடைய அத்தனை நபர்களையும் பாதுகாத்து, வீட்டு வேலைகள் செய்து, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து சமுதாயத்திற்கு அர்ப்பணித்து வரும் பெண்கள் ஆற்றக்கூடிய பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் தான் இந்த மகளிர் உரிமைத்தொகை. எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என , அமைச்சர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர்(பொ)  ஹேமலதா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்(பொ)  வித்யா, நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்  காளீஸ்வரி சமயவேலு, திருச்சுழி  ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுதம்பி ஊராட்சி தலைவர்கள், வட்டாட்சியர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/