திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் சமையல் உதவியாளராக வேலை செய்து வரும் அம்பிகா கணவனால் கைவிடப்பட்டவர் ஆவார். இவருக்கு சின்னத்துரை என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
நாங்குநேரி மேல்நிலைப் பள்ளியில் பயில்கிற தாழ்த்தப்பட்ட மாணாக்கர்கள் மீது நாங்குநேரி சுற்று வட்டார வேற்று சமூக மாணவர்களால் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேற்படி நாங்குநேரி மேல்நிலைப்பள்ளியில் படிக்காமல், பாளையங்கோட்டை களக்காடு, வள்ளியூர், மூலக்கரைப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு படிக்கச் சென்று வருகிறார்களாம். அதேபோன்று தான் மாணவன் சின்னதுரையும் வள்ளியூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறாராம்.
மேற்படி மாணவன் சின்னதுரையை நாங்குநேரியில் இருந்து படிக்கப் போகிற சுடலைகண் தம்பி மகனும் துரைச்சாமி என்பவரின் பேரனும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளனர். வழக்கம்போல மாணவர் சின்னதுரையை தேர்வு எழுதும் போது தங்களுக்கு துணை செய்ய வேண்டும் என்றும். தங்கள் புத்தகப் பைகளையும் சுமந்து வரச் சொல்லி துன்புறுத்தி வந்துள்ளனர். மாணவன் சின்னத்துரை கடந்த நான்கு நாட்களாக பள்ளிக்குச் சென்று படிக்க மறுத்ததால் தாய் அம்பிகா மகனை விசாரித்த போது நாங்குநேரி வேற்று சமூக மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாக கூறி அழுதுள்ளான்.
தாயார் அம்பிகா மேற்படி பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் சொல்ல தலைமையாசிரியரால் அம்மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கி விடுவதாக எச்சரிக்கப்பட்டு, இனிமேல் தவறு செய்ய மாட்டோம் என்று வேற்று சமூக மாணவர்களிடம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி சின்னத்துரை தங்கள் குற்றங்களை தாயாருக்கு சொல்லி பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டு விட்டோம் என்ற ஆதங்கத்தில் நேற்றைய தினம் மேற்படி வேற்று சமூக மாணவர்கள் நேரில் வந்து சின்னதுரையை மிரட்டி சென்றுள்ளனர்.
பின்பு 09.08.2023 இரவு 10 மணிக்கு பின்னர் எதிரிகள் மூன்று பேர் அருவாள் வெட்டு கத்திகளோடு சின்னத்துரை வீட்டிற்குள் புகுந்து சின்னத்துரையை தலை மார்பு கை தொடை பகுதிகளில் கொடூரமாக வெட்டி ரத்த காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். மாணவன் சின்னத்துரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த போதும் அவனது கால்களில் வெட்டி கீழே சாய்த்து உள்ளனர்.
சின்னத்துரையின் தங்கை அண்ணனை காப்பாற்ற முற்பட்டவளுக்கு கைவிரல்கள் வெட்டப்பட்டுள்ளது. தாய் அம்பிகா கண் முன்னே தன் பிள்ளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்ட போது தாய் அம்பிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவன் சின்னத்துரை உயிருக்கு ஆபத்து உள்ளதால் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேற்படி சம்பவத்தில் அம்பிகாவின் வீட்டிற்குள்ளும் வாசல் படி தெருவிலும் மாணவனின் ரத்தம் தேங்கி கிடப்பதை பார்த்து உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியுற்று சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் பெருந்தெருவில் இத்துடன் மூன்றாவது தீண்டாமை வன்கொடுமை என்பதால் அங்குள்ள மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட மக்களை ஆறுதல் படுத்தி குற்றவாளிகளை கைது செய்து விடுவதாக உறுதியளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நாங்குநேரியில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் படுத்த வேண்டும் என்றும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தனது நேரடி கண்காணிப்பில் மேற்படி மூன்று வழக்குகளையும் சிறப்பு கவனம் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தி 60 நாட்களுக்குள் குற்ற அறிக்கையை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனவும், தீண்டாமை வன்கொடுமை கொலை முயற்சி குற்றவாளிகளை அனைவரையும் கைது செய்து சிறைபடுத்த வேண்டும்.
மேற்படி மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வரை அப்பகுதியில் போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும். காயம் பட்ட மாணவனை சிறப்பு மருத்துவர் குழுவை ஏற்படுத்தி பரிசோதித்து தேவைப்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அரசு சிகிச்சை அளிக்க வேண்டும்.
மேற்படி மூன்று தீண்டாமை வன்கொடுமை சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தீர்வுகள் அனைத்தையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என பாதிக்க பட்ட சமூகத்தினர் அரசை கேட்டு கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக