மதுரை மாவட்டம் மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிகளில் கிராம மக்கள் நலனுக்காக அணுகுசாலை அமைப்பது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

மதுரை மாவட்டம் மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிகளில் கிராம மக்கள் நலனுக்காக அணுகுசாலை அமைப்பது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு.

AVvXsEhzIDWNj_bY_tJmyPIffuaVYiS9-split

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிகளில், கிராம மக்கள் நலனுக்காக அணுகுசாலை அமைப்பது தொடர்பாக  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மூலம் மேலூர்-காரைக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்டு சுமார் 13.50 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், மேலூர் வட்டம் தனியாமங்கலம், சாத்தமங்கலம், சருகுவலையபட்டி ஆகிய கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளால் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்து தங்களது கிராம பகுதியில் அணுகு சாலை அமைத்திட வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.


இது தொடர்பாக, எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இக்கிராமப் பகுதிகளில் இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் சிரமப்படாத வகையிலும், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் பாதிக்கப்படாத வகையிலும் அணுகு சாலை அமைத்திட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 நாட்களில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,  மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad