தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2814 வக்ஃப் நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. இந்த பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களிளல் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ. 25,000 /- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஸ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதரப் பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியம் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2814 வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாக செய்வதற்கும், சமயப் பணி ஆற்றுவதற்கும் மானிய விலையில் புதிய இரு சக்கர வாகனம் வாங்குவது பேருதவியாக இருக்கும் என்றும், இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 % அல்லது ரூ. ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள்
- தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் மனுதாரர் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- வயது 18 –ல் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மான்ய விலையில் உதவி கோரி விண்ணப்பம் செய்தால் 1.பேஷ் இமாம் 2.அரபி ஆசிரியர் 3.மோதினார் 4.முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள்
- இரு சக்கர வாகனம் பெற்ற பயனாளி வாகனத்தை குறைந்தபட்சம் 5.5 ஆண்டுகள் வரை விற்கவோ, வேறொரு நபருக்கு மாற்றவோ உரிமை கிடையாது. மீறினால் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் பயனாளியின் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை
- வயது சான்று
- வருமானச் சான்றிதழ்
- புகைப்படம்
- மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று
- சாதிச் சான்று
- ஓட்டுநர் உரிமம் / LLR
- வங்கிக் கணக்கு விவரம்
- சம்மந்தப்பட்டமுத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃப்-ல் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று வக்ஃப் கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலும் இல்லது www.cuddalore.nic.in/welfare schemes என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை (உரிய இணைப்புகளுடன்) முழுமையாக பூர்த்தி செய்து
அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், 303, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607 001. மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மருத்துவர். அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக