சிவகாசி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.பி. மாணிக்கம்தாகூர் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் வாய்ப்பு உள்ளது... என் தகவல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. பின்னர் எம்.பி. மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இன்றைய நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு, வளர்ந்த நாடாக இந்தியா உருவானதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, தற்சார்பு வளர்ச்சி என ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னாலும் காங்கிரஸ் பேரியக்கம் இருக்கின்றது. அப்படி பாடுபட்டு உருவாக்கிய கட்டமைப்புகளை சீர்குலைக்கும் வேலைகளை தற்போதைய பாஜக மோடி அரசு செய்து வருகிறது. லஞ்சத்திற்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் பிரதமர் மோடி பேசி வருகிறார். இன்று அவர்கள் மீது பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் வந்தபடி உள்ளன. கிரிக்கெட் பந்து, மட்டையை பற்றிக்கூட தெரியாத ஜெய்ஷா என்பவர் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கிறார். அவருக்குள்ள ஒரே தகுதி, அவர் அமித்ஷாவின் மகன் என்பது மட்டும் தான். இது தான் பச்சையான வாரிசு அரசியல். ஆனால் கடந்த 127 ஆண்டுகளாக நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமாக ரத்தம் சிந்திய கட்சி காங்கிரஸ் கட்சி. ஆமாம் இங்கு வாரிசு அரசியல் தான். காங்கிரஸ் கட்சியில் 5வது தலைமுறையாக மக்களுக்காக, நாட்டுக்காக உழைத்து வருகிறோம். பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த பாஜக ஆட்சியில் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
பாஜகவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணிக்கு பல கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர். தற்போது இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் இணைந்துள்ளன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் சில கட்சிகள் இந்தியா கூட்டணியில் வந்து சேர இருக்கிறது. வலுவான கூட்டணியின் மூலம் பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக வீழ்த்தப்படும். பாஜக வீழும் நாள் தான் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அது வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நடக்கும். சிவகாசி - சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்தி வந்தனர். அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று மாணிக்கம்தாகூர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக