இளம் தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

இளம் தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சீனிவாசா நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் தினத்தை ஒட்டி "மாணவிகள் கற்கும் போதே தொழில் முனைவோராகவும் வர்த்தகத்தில் சிறந்து விளங்க  வேண்டும்" என்பதை மையப்படுத்தி மிக பிரம்மாண்டமான முறையில் 145-க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான அரங்குகளை மாணவிகள் அமைத்திருந்தனர்.


அதியமான் கல்வி நிறுவனங்களில் செயலர் முனைவர் ஷோபா திருமால் முருகன் மற்றும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீனி திருமால் முருகன் அவர்கள் அரங்குகளை திறந்து வைத்து இளம் தொழில் முனைவோராகவும், வர்த்தகராகவும் உருவாகியுள்ள மாணவிகளின் அரங்குகளை பார்வையிட்டு மாணவிகளை ஊக்கப்படுத்தினர். 


98-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளில் பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, கேழ்வரகு, திணை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, பருப்பு வகைகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட அடை, கொள்ளுக்கட்டை, சுண்டல், வடை போன்ற காரம் மற்றும் இனிப்பு வகைகளை மாணவிகள் தங்கள் இல்லத்தில் தூய்மையான முறையில் உருவாக்கி அதற்கு விலைகளை நிர்ணயம் செய்து அரங்குகளில் வைத்து விற்பனை செய்தனர். 


இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளையும் அரங்குகளில் வைத்திருந்தனர். இன்றைய இளைய சமுதாயத்தினர் பார்த்திராத சுவைக்காத பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை மாணவிகள் சமைத்துக்கொண்டு வந்து அரங்குகளில் வைத்து விற்பனை செய்ததை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.  மேலும் தங்களது தோட்டத்தில் விளையக்கூடிய கொய்யா, நெல்லி, பெருநெல்லி, கீரை வகைகள், போன்றவையும் அரங்குகளில் வைத்து விற்பனை செய்தனர். 


இந்த உணவு அரங்கைப் பார்க்கும்போது ஒரு பெரிய உணவுத்திருவிழா போன்று காட்சியளித்தது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கான ஆடைகள் மற்றும் ஆபரண அரங்குகளையும் மாணவிகள் அமைத்திருந்தனர். அதில் பெண்கள் உடுத்தும் அனைத்து வகையான ஆடைகள், வளையல், தோடு, கிளிப் போன்ற ஆபரணங்களை தாங்களே உருவாக்கி விற்பனைக்கு வைத்திருந்தனர். சில மாணவிகள் மொத்த வியாபார கடையில் வாங்கி வந்து அரங்கை அமைத்திருந்தனர். 


இதன் மூலம் மாணவிகள் மொத்த வியாபாரிகளிடமிருந்து பெற்று சில்லரை வியாபாரம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக  இருந்ததாக கூறினர். தங்கள் தோட்டத்தில் இருக்கும் ரோஜாச் செடி, முல்லை செடி, வாழைக் கன்றுகள் போன்றவைகளையும் விற்பனைக்காக வைத்திருந்தனர். மாணவிகள் வரைந்த ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தம் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மெஹந்தி போடுவது கற்பனைக் காட்சிகளை ஓவியமாக தீட்டி வடிவமைப்பு செய்து வைத்திருந்தனர்.


இந்நிகழ்வு மூலமாக கிராமப்புற மாணவிகள் படிக்கும்போது தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி தொழில் முனைவோராகவும் சிறந்த வர்த்தகராகவும் உருவாக்கிக் கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த பிரம்மாண்ட நிகழ்வை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் ஒருங்கிணைத்த முனைவர் மா. அன்புச்செல்வி IIC/EDC CONVENOR மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் P.M உமாராணி IIC  மற்றும் EDC உறுப்பினர்கள், அனைத்து துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் மாணவிகள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் அதியமான் மெட்ரிக் பள்ளி, அதியமான் பப்ளிக் பள்ளி, அதியமான் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அரங்குகளை பார்வையிட்டு உணவுகளை  சுவைத்து மகிழ்ந்தும் பொருட்களை வாங்கியும் இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் அதிக அளவில் வர்த்தகம் செய்து லாபத்தை ஈட்டிய மாணவிகள்: பாரம்பரிய உணவுப் பொருட்களை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்தவர்கள் இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் குழுவினர், ஆடைகள் பிரிவில் வி. தீபிகா மற்றும் நஸ்ரின் இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகள், ஆபரணம் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நஸ்ரின், கைவினைப் பொருட்கள் விற்பனையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி அ.ஸ்ரீநிதி ஓவியங்கள் விற்பனையில் இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டின் கணினி அறிவியல் மாணவி மு.நிஷா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ் பானு ஆகியோர் வர்த்தக திருவிழாவில் பங்கேற்று பெருமளவில் லாபத்தை ஈட்டி புதிய இளம் தொழில் முனைவோராக மாறி உள்ளனர் அதிக லாபம் ஈட்டி புதிய இளம் தொழிலாளர் முனைவோராகவும் வர்த்தகராகவும் மாறி உள்ள மாணவிகளை கல்லூரி முதல்வர் செயலர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி ஊக்கமூட்டினர்


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்திய நாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/