புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருள்மிகு ஸ்ரீ அழகியநாச்சி அம்மன் கோவில் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.அருள்மிகு ஸ்ரீ அழகியநாச்சி அம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆடி 7, ஜூலை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.நாள்தோறும் உபயதாரர்களால் மண்டகப்படி நடைபெற்றது.
பின்பு 10 நாள் திருவிழாவான இன்று ஆடி 16 ஆம் தேதி ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ அழகியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தேரோட்ட விழா துவங்கியது.பின்பு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து வான வேடிக்கையுடன் திரளான பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற வேண்டி தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது.
தேர் செல்லும் முக்கிய வீதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கோவில் பரம்பரை தர்மக்கர்த்தா ராஜாஅம்பலகாரர், சேதுபதி அம்பலகாரர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இத்தேரோட்ட விழாவில் உள்ளூர், வெளியூர்களிலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோயில் தேர்த்திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான்,இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின்சார வாரிய பணியாளர்கள் என பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக