திருப்பத்துார் அருகே குனிச்சி வக்கீல் அய்யர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்(48).கட்டடத் தொழிலாளி.இவர் கடந்த மாதம் 4ம் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு பேருந்தில் வந்துள்ளார் கந்திலி அருகே வந்த போது இவரிடம் இருந்த செல்போன் மற்றும் செல்போன் கவரில் வைத்திருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ரூ.2,500 திருடு போனது. இதுகுறித்து கந்திலி போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஒரு வாரம் கழித்து மருத்துவ சிகிச்சைக்காக பணம் எடுக்க திருப்பத்துார் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.70 ஆயிரத்து 600 முழுவதும் எடுக்கப்பட்டிருந்தது. எனவே அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர் தனது வங்கிக் கணக்கின் ஸ்டேட்மென்ட் பார்த்தபோது,கடந்த மாதம் 4ம் தேதி செல்போன் திருடப்பட்ட சிறிது நேரத்தில் யுபிஐ (கூகுள் ப்பே) மூலம் ஈஸ்வரி என்பவருக்கு ரூ.15 ஆயிரம், முத்துச்செல்வம் என்பவருக்கு ரூ.10 ஆயிரம், பிரியகுமாரி என்பவருக்கு ரூ.30 ஆயிரம் என அவரது வங்கி கணக்கில் இருந்து பலருக்கு ரூ.70,600 பணம் முழுவதும் பரிவர்த்தனை செய்தது தெரிந்தது.
மேலும் பண பரிவர்த்தனை செய்யப்பட்ட செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் செல்போன் திருடிய நபர் தனக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறது. எனவே என்னிடம் ஏடிஎம் கார்டு இல்லை அதனால் யுபிஐ மூலம் உங்களுக்கு பணத்தை அனுப்புகிறேன் உங்களுக்கு தேவையான கமிஷன் பிடித்துக் கொண்டு மீதி பணத்தை கொடுங்கள் எனக்கூறி பணத்தை பெற்றுள்ளார்.
அப்போது காவேரிப்பட்டினத்தை சேர்ந்த முத்துச்செல்வம் நடத்தி வரும் இ சேவை மையத்தில் ரூ.10 ஆயிரம் யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்து கமிஷன் போக பணத்தைப் பெற்றுள்ளார்.மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அந்த நபரின் உருவம் பதிவாகி இருந்தது.
அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்துார் சைபர் கிரைம் போலீசில் பன்னீர் புகார் அளித்தார். இந்நிலையில் எஸ்பி அலுவலகத்துக்கு வந்த பன்னீர் தனக்கு மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணம் திருடப்பட்டது.இது குறித்து ஆதாரத்துடன் சைபர் கிரைம் போலீசில் கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டது.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் தன்னை அலட்சியப்படுத்துவதாக அவர் கூறினார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக