மேகதாது அணைக்கட்ட கர்நாடக அனைத்து கட்சி கூட்ட தீர்மானம் சட்ட விரோதமானது என மத்திய அரசு அறிவிக்க முன் வர வேண்டும் என மன்னார்குடியில் பி .ஆர்.பாண்டியன் பேட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

மேகதாது அணைக்கட்ட கர்நாடக அனைத்து கட்சி கூட்ட தீர்மானம் சட்ட விரோதமானது என மத்திய அரசு அறிவிக்க முன் வர வேண்டும் என மன்னார்குடியில் பி .ஆர்.பாண்டியன் பேட்டி.


தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது  கர்நாடக அரசு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு மாதாந்திர அடிப்படையில் தரவேண்டிய தண்ணீரை கொடுக்க மறுப்பது சட்டவிரோதமானது. 

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மேகதாது அணை கட்டுவது ஒன்றுதான் தீர்வாக அமையும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அரசியலமைப்பு சட்டத்திற்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது. இதன் மூலம் கர்நாடகாவில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் சட்ட விரோதமானது என மத்திய அரசு அறிவிக்க முன் வர வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து கட்சி குழு பிரதமரை சந்திக்க எடுத்திருக்கும் முடிவை பிரதமர் ஏற்கக்கூடாது.  


காவிரி, மேகதாது குறித்து அனைத்து வழக்குகளும்.நிர்வாக உரிமைகளும் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. மேகதாது அணை கட்டுமானம் குறித்து கர்நாடக அரசு தயாரித்த வரைவு திட்ட அறிக்கை 2022 ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது .காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் விவாதிக்க மறுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  


இதுகுறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேகதாது அணைக்கட்ட கர்நாடக அனைத்து கட்சி கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் பிரதமரை சந்தித்து வலியுறுத்த அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் பிரதமர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக அமையும் என நான் எச்சரிக்கிறேன்.  தமிழ்நாடு முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இதுவரை கண்டனம் தெரிவிக்காது தமிழ்நாட்டிற்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது. 


உடனடியாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடக அரசு நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேகதாது அணை கட்டி தான் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்கிற நிலையை கர்நாடக நியாயப்படுத்த விரும்பினால்  ராசிமணலில் அணை கட்ட  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலடி கொடுக்க முன்வர வேண்டும்.


 தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டம் கூட்டி ஒத்த கருத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.மறுக்கும் பட்சத்தில் விவசாயிகள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விரைவில் ஒத்தக்கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். கர்நாடகாவிற்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு முதலமைச்சர் முன்வர வேண்டும் என தெரிவித்தார் 



-செய்தியாளர் தருண்சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/