தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் பிச்சேந்திர மூர்த்தி (வயது32). இவர் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்திருந்தார். இதே போன்று தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மொத்தம் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.
இது குறித்த புகார்களின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் தூத்துக்குடி மடத்தூர் ரோடு முத்துநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (24). திரு வி.க. நகரை சேர்ந்த சுடலைமுத்து (19) மற்றும் பிரையண்ட் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக