தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே 4.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை மரங்கள் மீது இடி விழுந்து தீ பிடித்ததில் ரூ.5 லட்சம் முருங்கை மரங்கள் பூ, காய்களுடன் தீயில் கருகி சேதம் ஏற்பட்டுள்ளது.
நாசரேத் சுற்று வட்டாரங்களில் இன்று மதியம் 2மணி முதல் 3 மணி வரை சுட்டெரித்த வெயில் சற்று தணிந்து மேகம் மந்தாரமாக காணப்பட்டது. இந்த நேரத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நல்ல மழை பெய்தது. அந்த சமயத்தில் நாசரேத் அருகில் உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிராமத்தில் பனை மரத்தில் இடி விழுந்தது.
பனை மரத்தின் கீழே குமார் என்பவர் பயிரிட்டிருந்த முருங்கை மரங்கள் பூ, காய்களுடன் தீயில் கருகியது. தீ பிடித்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான முருங்கை மரங்கள் காய்களுடன் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்டதும் ஊராட்சி மன்ற தலைவர் சகாய சுமதி, கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பட்டன், தலையாரி முருகன் ஆகியோர் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மழை பெய்யாமல் இடி விழுந்ததில் முருங்கை மரங்கள் தீயில் கருகி உள்ளது, இப்பகுதி மக்களிடையே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக