தூத்துக்குடி: ஆகஸ்ட் 5 இல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூர் வருகிறார். உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய பணிகள் துவக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி: ஆகஸ்ட் 5 இல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூர் வருகிறார். உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய பணிகள் துவக்கம்.


தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார்.


அதன்படி, இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பொருட்களை கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது விரைந்து நடைபெற்று வருகின்றன. 


குறிப்பாக ஆதிச்சநல்லூர் பரம்பு என சொல்ல படும் மேட்டு நிலத்தில் "சைட் மியூசியம்" அமைக்கவும், அதன் மேல் கண்ணாடி இழைகளால் ஆன பலகை அமைத்து பார்வையாளர்கள் கண்டு கொள்ளவும் பணிகள் நடந்து வருகின்றன.


ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. 


தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து திருவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், அப்போதைய திருவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் உதவியுடன் ஆதிச்சநல்லூர் மக்கள் மேற்படி இடங்களை இலவசமாக வாங்கி கொடுத்தார். இதனால் இங்கு பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில், முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் "சைட் மியூசியம்" அமைக்கப்பட்டு திறப்பு விழா காண தயாராக உள்ளது.


இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் கூறியதாவது, "சைட் மியூசியம்" என்பது இந்தியாவில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போது 'பி' சைட்டில் கண்ணாடி மூலம், உள்ளது உள்ள படியே தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் அதன் மீது கண்ணாடி பலகைகள் அமைத்து அதன் வழியாக பொருள்களை நேரடியாக காணும் படி காட்சி படுத்தப்பட்டுள்ளது. 


மேலும் உள்ளே விளக்குகள் பொருத்தப்பட்டு, பார்வையாளர்களுக்கு முதுமக்கள் தாழிகள், அதனுள் கிடைத்த பொருள்கள் நேரடியாக தெரியும் படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த "சைட் மியூசியத்தினை" சுற்றி பூங்கா மற்றும் புகைப்பட கண்காட்சி அமைத்து உள்ளே வரும் தொல்லியல் ஆர்வலர்களை திருப்திபடுத்தும் வண்ணம் அமைத்து வருகிறோம் என்று கூறினார்.


இதற்கான பணி இன்றும் இரவு பகலாக நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக கண்ணாடி பலகை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. மேலும் இருபுறமும் மூங்கில் மறைவு கொண்டு அடைக்கும் பணி நடந்து வருகிறது. கண்ணாடி பலகைகுள் முதுமக்கள் தாழி இருக்கும் இடம் பார்வையாளர்களுக்கு மிகவும் தெளிவாக கண்டுகொள்ள, மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா, சீனா, மேற்கு ஆசியா கண்டத்திற்கு நிகரான இந்த "சைட் மியூசியம்" ஆதிச்சநல்லூரில் அமைய இருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1876 வருடத்தில் இந்தியாவில் முதல் முதலில் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூரில் சுமார் 147 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிலே முதல் முதலில் "சைட் மியூசியம்" அமைவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.


ஆதிச்சநல்லூர் "சைட் மியூசியம்" இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் டெல்லி தொல்லியல் கண்காணிப்பாளர் அணில் சிங், டெல்லி துணை தொல்லியல் கண்காணிப்பாளர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார், பொறியாளர் கலைச்செல்வன் உள்பட அதிகாரிகள் இரவு பகலாக இந்த தொல்லியல் "சைட் மியூசியம்" பணியை கண்காணித்து வருகின்றனர்.


ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை 10 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். இதற்காக தனி மேடை அமைக்கும் பணி பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


- தமிழக குரல் செய்தியாளர் Vn சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/