தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், நாசரேத் அருகிலுள்ள 85 வருட பழமை வாய்ந்த இடத்தில், திருமறையூர் சேகரம் மறுரூப ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா ஆகஸ்ட் 4ம் தேதி இன்று முதல் துவங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 4, 5ம் தேதிகளில் (வெள்ளி, சனி) ஆகிய இரண்டு நாட்கள் கன்வென்ஷன் கூட்டத்தில் தூத்துக்குடியை சார்ந்த ஆத்தும நங்கூரம் சுவிசேஷ ஊழியத்தின் சகோ.செல்வக்குமார் தேவ செய்தியை கொடுக்கிறார். திருமறையூர் பிரைட் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் சிறப்பு பாடல்களை பாடுகின்றனர்.
6ம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெறுகிறது, ஆராதனையில் அருள்திரு ஜான் சாமுவேல் தேவ செய்தி வழங்குகிறார், மதியம் 2 மணிக்கு திருமறையூர் சபை மக்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன, மாலை 6:30 மணிக்கு நடைபெறும் 16வது ஆலய பிரதிஷ்டை பண்டிகையில் மூக்குபீரி சேகரத் தலைவர் அருள்திரு ஞானசிங் எட்வின் தேவ செய்தி வழங்குகிறார். அதனை தொடர்ந்து ஐக்கிய விருந்து நடைபெறும்.
7ம் தேதி திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு பரிசுத்த திருவிருந்துடன் அசன பண்டிகை ஆராதனை நடைபெறும். மாலை 5.00 மணிக்கு அசன (சம பந்தி போஜனம்) வைபவம் நடைபெறும்.
8ம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை சேகர குரு ஜாண் சாமுவேல், சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை, அசன கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்து வருகின்றனர்.
திருமறையூர் வரலாறு:
நீல் ஐயரவர்கள் நாசரேத் நகருக்கு தெற்கே தேரி பூமியில் 26 ஏக்கர் நிலத்தை வாங்கி சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து 1937ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அவ்விடத்தில் முதல் கட்டிடம், கட்ட அஸ்திபாரம் அமைத்தார்கள்.
1938ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இரண்டு பெரிய பங்களாக்களும், இந்திய ஆசிரியர்களுக்காக நான்கு பங்களாக்களும், குருபட்டம் பெறும் மாணவர்களுக்காக 16 வீடுகளும், உபதேசிமார் மாணவர்களுக்காக 18 வீடுகளும், வேலைக்காரர்களுக்காக 6 சிறு வீடுகளும், இரண்டு வகுப்பறைகளும், இந்திய முறைப்படி விளங்கும் பிரகாரத்தையும் சிற்ப கற்றூண்களையும் சிங்காரமாய் விளங்கும் கோபுரத்தை உடைய அலங்கார சிற்றாலயத்தையும், இன்சுவை கொண்ட தண்ணீருடைய 4 கிணறுகளையும் உடைய குடியேற்றத்தை பெரும் செலவில் நிர்மானித்து அதற்கு பரிசுத்த வேதாகம பதி என்று அர்த்தங்கொள்ளும் திருமறையூர் என்ற பெயரை சூட்டினார்.
தேவனுடைய வழிநடத்துதலும், கிருபையும், மகிமையும் உடைய இன்றைய திருமறையூர் சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்னர் உடை மரங்களும், பனை மரங்களும், விராளிச் செடிகளும் அடர்ந்த தேரிப் பகுதியாக காணப்பட்ட ஒரு இடமாக இருந்தது. ஆனால் இன்று திருமறையூர் சபை என்ற சிறப்பு பெயரை உடையதாக தாங்கி நிற்கிறது. இத்தனை மேன்மைகளுக்கும் காரணமாய் இங்கு அமைந்திருந்த தமிழ்நாடு வேதாகமக் கல்லூரி சில பல காரணங்களால் 1969ம் ஆண்டு மதுரை மாநகரில் உள்ள அரசரடி என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது.
திருமறையூரில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் நிலப்பாதுகாப்பு பொறுப்பு ஆகியவை நாசரேத்தில் அமைந்துள்ள மர்காஷியஸ் கலைக்கல்லூரியின் வசம் ஒப்புவிக்கப்பட்டது. மர்காஷியஸ் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் பற்பல வேலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் மற்றும் நாசரேத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்த நூற்பாலை பணியாளர்கள் என பலர் இங்கு குடியேற்றப்பட்டனர்.
ஒரு சபையும் இங்கு உருவானது. இச்சபையானது நாசரேத் பாஸ்ட்ரேட்டுடன் இணைக்கப்பட்டு ஒரு கிளை சபையாக மாறியது. மேலும் இங்கு இருந்த பங்களாக்களில் டேனிஸ்பேட்டை பெத்தேல் மாணவர் இல்லம், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் இல்லம், போலியோ இல்லம், கிரேஸ் என அழைக்கப்படும் ஏழை மாணவ மாணவியருக்கான டே கேர் சென்டர். முதியோர் இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் இல்லம், மர்காஷியஸ் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவியர் இல்லம் என எண்ணற்ற ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது சபை வளர்ந்து ஆராதனை சிறப்புற நடைபெற்று வருகிறது. மேலும் வளாகத்திற்குள் இருக்கும் ஐ.எம்.எஸ் மிஷனரி பயிற்சி கூடம் ஆகியவை நாசரேத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் திருமறையூரிலே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கவலைகள் ஒருபோதும் வெற்றியை தருவதில்லை; முயற்சிகளே வெற்றியைத் தருகிறது. எனும் சிந்தனையுடன் திருமறையூர் வரலாறு உங்கள் நினைவுகளுக்கு தமிழக குரல் டிஜிட்டல் தளத்தில்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn Saran.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக