தூத்துக்குடி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு இன்று (23.08.2023) பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் அமலாக்கத் துறை வழக்கறிஞரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும் யாரும் ஆஜராகாததால் செப்டம்பர் 13ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகிய 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 2017ம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்கை ஆதாரமாக கொண்டு அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து, அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை ஒருபுறமும், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை ஒருபுறமும் என இரண்டு வழக்குகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அமலாக்கத்துறை, தங்களையும் சேர்க்க வேண்டும் என்றும், தங்களிடம் இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் இருப்பதாகவும், அரசு வழக்கறிஞருடன் இணைந்து இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதாகவும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை நடந்தது. இதில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கபட இருந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகாததாலும் வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும் யாரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக