தூத்துக்குடி - புளியம்பட்டியில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமங்களில் பொது இடங்களில் இருந்த 101 ஜாதிய அடையாளங்கள் அழித்தனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - புளியம்பட்டியில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமங்களில் பொது இடங்களில் இருந்த 101 ஜாதிய அடையாளங்கள் அழித்தனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.




தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டியில் சமீபத்தில் நடந்த சமூக நல்லிணக்க கூட்டத்தில் சமூக ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக அப்பகுதி பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமங்களில் பொது இடங்களில் இருந்த 101 ஜாதிய அடையாளங்கள் அழிப்பு - கிராம மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.


தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி உட்கோட்டம் புளியம்பட்டி பகுதியில் சவலாப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 09.08.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் அனைத்து சமுதாய மக்களை ஒன்றினைக்கும் வகையில் அனைத்து சமுதாயத்தினரையும் கூட்டி சமூக நல்லிணக்கம் மற்றும் மாற்றத்தை தேடி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி அக்காநாயக்கன்பட்டி, ஒட்டுடன்பட்டி, பூவாணி, சவலாப்பேரி, ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம், கொடியன்குளம், நாரைக்கிணறு, மருதன்வாழ்வு மற்றும் கொல்லங்கிணறு கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வன்முறையை தடுப்பது சம்மந்தமாகவும் சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தவது தொடர்பாகவும் அனைத்து கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் கிராமங்களில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் பொது இடங்களிலும் கல்வி நிலையங்களிலும் வன்முறையை தூண்டக்கூடிய ஜாதிய அடையாளங்களை அறவே நீக்கி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார்.


மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினரின் முன்னிலையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 'நாம் நமக்காகவும் நம் சந்ததியனருக்காகவும் சாதி மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்கு பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்தமாட்டோம்" என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


மேற்படி நடைபெற்ற சமூக நல்லிணக்க கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் பயனாக நேற்று (15.08.2023) சுதந்திர தினத்தை முன்னிட்டு மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், உதவி ஆய்வாளர் சதிஷ் நாராயணன் மற்றும் புளியம்பட்டி காவல்துறையினர் முன்னிலையில் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தா கிராமத்தில் ஊர் நாட்டாண்மை மணிமுருகன், சின்னத்துரை,  சுடலைமணி, சரஸ்வதி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள மின் கம்பங்கள் - 20, நெடுஞ்சாலைத்துறை பதாகை - 5, மேல் நிலை நீர்தேக்க தொட்டி - 1, பேருந்து நிறுத்தம்-1 மற்றும் அடி பம்பு குழாய்-1 ஆகியவற்றில் ஏற்கனவே வரையபட்டிருந்த சாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அழித்தனர்.


அதேபோல் சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் கிராம நாட்டாண்மை  பெருமாள் மற்றும் முருகன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள மின் கம்பங்கள் -25, நெடுஞ்சாலைத்துறை பதாகை -1, மின்வாரிய டிரான்ஸ்பார்மர் -1, மேல் நிலை நீர்தேக்க தொட்டி - 1, குடிநீர் மோட்டார் ரூம் -1 மற்றும் அடி பம்பு குழாய்-1 ஆகியவற்றில் ஏற்கனவே வரையபட்டிருந்த சாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அழித்தனர்.


அதேபோல் காசிலிங்காபுரம் கிராமத்தில் கிராம நாட்டாண்மை விஜி, சின்னத்துரை பத்ரன், பஞ்சாயத்து துணை தலைவர்  முத்துகிருஷ்ணன் மற்றும் அய்யாத்துரை உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள மின் கம்பங்கள் -28, நெடுஞ்சாலைத்துறை பதாகை -8, மின்வாரிய டிரான்ஸ்பார்மர்-1, தரைப்பாலம்-2 மற்றும் அடி பம்ப் குழாய்-2 ஆகியவற்றில் ஏற்கனவே வரைய பட்டிருந்த சாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அழித்தனர்.


மேற்படி ஆலந்தா கிராமம், சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் 73 மின் கம்பங்கள், 16 நெடுஞ்சாலைத்துறை அடையாளப் பலகை (Sign Boards),  2 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 4 அடிகுழாய்,  2  மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள், 2 தரைப்பாலங்கள்,  குடிநீர் மோட்டார் மற்றும் பேரூந்து நிறுத்தம் என 101 இடங்களிலிருந்த  ஜாதிய அடையாளங்களை அழித்துள்ளனர்.


இதனையடுத்து அனைத்து மக்களும் இனிவரும் காலங்களில்; சாதிய வேறுபாடுகள் இல்லாமல் ஊருக்குள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் செயல்பட்டு, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற வேண்டும் எனவும், சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/