நூற்றாண்டு பெருமை கொண்ட கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் மணவை தமிழ்மாணிக்கம் உரையாற்றினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 அக்டோபர், 2022

நூற்றாண்டு பெருமை கொண்ட கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் மணவை தமிழ்மாணிக்கம் உரையாற்றினார்.

photo_2022-10-27_17-48-05
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரியில்   1909-ல் தொடங்கப் பெற்ற கணேசர் கலை அறிவியல் கல்லூரியில், இன்று  பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் உரையாற்றினார்.

"கண்டேன்.. கனிந்தேன்.. கலந்தேன்.." என்னும் தலைப்பில் அவர் பேசியது.. ஒன்றைக் காண்பது கண்ணோட்டம். அத்தகைய கண்ணோட்டம் என்பது எது ஒன்றை நோக்கிலும், அதை நல்ல நோக்கில் காண்பது சிறப்பு. கண்டவற்றை நினைந்து கனிவதும், அதில் லயித்து கலப்பதும் ஒன்றிணைவதாகும்.


வடலூர் வள்ளலார் பெருமான் அடி எடுத்துத் தந்ததைத் தான், நான் இன்று தலைப்பெடுத்திருக்கிறேன். "அருளரசை அருட்குருவை அருட்பெருஞ்சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத் தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனித்தலைமைச் சித்தச் சிகாமணியை மருவுபெரும் வாழ்வை எல்லா வாழ்வும் எனக்களித்த வாழ்முதலை மருந்திணை மாமணியை என் கண்மணியைக் கருணை நடம் புரிகின்ற கனகசபாபதியை கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே" என்று வள்ளல் பெருமான் பாடினார்.


நான் என் பார்வையில் கண்டதை.. நான் கனிந்ததை.. என் மனம் கலந்ததை.. உங்களுக்குத் தரவிழைகிறேன். கவியரசர் கண்ணதாசன் இந்த செட்டிநாட்டு மண்ணில் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். அவர் மிக எதார்த்த மனதுக்காரர். அவரை எல்லோரும் சுகவாசி, நிரந்தரமற்றவர் என ஒரு குடுவையில் அடைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் வெள்ளை மனதுக்காரர். மனதில் பட்டதை பேசுவதும், பாட்டாகப் பாடுவதும் அவருக்கு கைவந்த கலை.



Science%20Google%20Form%20Header

போதிமரத்து புத்தன் போய்விட்டான் என்றிருந்தோம். பாதி வழி போன அவன் பண்டிதராய் திரும்பி வந்தான். சீரிய நெற்றி எங்கே..? சிவந்த நல் இதழ்கள் எங்கே..? நேரிய பார்வை எங்கே..? எங்கள் நேரு மகான் எங்கே.. எங்கே..? என்று அவன் பாட்டு வரிகளில் அழுகையை, கண்ணீரைக் காணிக்கையாக்குகிறான். அறிஞர் பெருந்தகை அண்ணாவைப் பாடும்போது. "முத்தினில் அழகிருக்கும். முல்லையில் மணமிருக்கும். மொத்தமும் நிறைந்திருக்கும் என் அண்ணா மொழிந்திடும் வார்த்தையில். நாட்டிற்கு ஒருவரடி நற்றமிழ் அறிஞரடி கேட்டவர் அறிவாரடி என் அண்ணா கீழ்க்குணம் அறியாரடி" என அண்ணாவுடன் ஒன்றுவதும் கர்மவீரர் காமராசரை "தங்கமணி மாளிகையில் தனிவயிரப் பந்தலிட்டு மங்கையர்கள் சுற்றி நின்று மங்கலமாய்க் கோலமிட்டு திருநாள் அலங்காரச் சிலைபோல அலங்கரித்து வாழ்த்தொலிக்கப் பெற்றெடுத்த மகனாக நீ வந்ததில்லை. வண்ணமலர்த் தொட்டிலில் உன் வடிவம் அசைந்ததில்லை.


மாமதுரை நாட்டில் மறவர் படை நடுவில் தேமதுரத் தமிழ்பாடும் திருநாடார் தங்குலத்தில் ஏழைமகன் ஏழையென வந்துதித்த இன்னமுதே..! நீ நிமிர்ந்தால் தலை இடிக்கும் நிற்பதற்கே இடம் இருக்கும் அமைவான ஓர் குடிலில் அய்யா நீ வந்துதித்தாய்..!" என ஒரு தாய் தன் மகனை தாலாட்டி மகிழ்ந்ததைப் போல, தாம் கண்ட தலைவனை கனிந்துருகி, அவன் பாதையில் பயணத்தில் கலந்திருப்பதைத் தான் அவனுடைய கவிதை புலப்படுத்துகிறது.


கண்டேன் என்பது தான் பிரச்சனை.. கனிவதிலும்.. கலப்பதிலும்.. பிரச்சனை இல்லை. மரத்தை மறைத்தது மாமத யானை. மரத்தினில் மறைந்தது மாமத யானை. பரத்தை மறைத்தது பார் முதல் பூதம். பரத்தினில் மறைந்தது பார் முதல் பூதம். என்றார் திருமூலர்.



Science%20Google%20Form%20Header

யானை என்று பார்த்தால் மரம் மறையும். மரம் என்று பார்த்தால் யானை மறையும். ஐந்து பஞ்ச பூதங்கள் அடங்கிய உலகு என்றால், பரம் பொருள் (இறைவன்) மறைவான். பரம்பொருள் என்றால் பஞ்ச பூதங்கள் மறையும். ஆக, நாம் காண்பது நல்லனவாக இருந்தால், நம் வாழ்வும் கனியும். அந்தக் கனிதலுடன் பிணையும் உறவுகளால் கலந்து மகிழ முடியும்.


நான் இன்று நூற்றாண்டு பெருமை கொண்ட கணேசர் அறிவியல் கல்லூரி மாணாக்கர், பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் அனைவரையும் கண்டேன்.. அவர்களுடைய அன்பில் கனிந்தேன்.. இன்னும் ஆயிரமாண்டு பெருமைக்கு இக்கல்லூரியை எடுத்துச் செல்லும் பணிகளில் நானும் கலந்தேன்... என அவர் பல உதாரணங்களை எடுத்துச் சொல்லி ஒரு மணி நேரம் அற்புதமான உரை தந்தார்.


கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் 87-ஆம் ஆண்டு நன்னெறிக் கழக தொடக்க விழாவிற்கு  சன்மார்க்க சபைத் தலைவர் சி. நாகப்பன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வே.ஆ பழனியப்பன் அவர்கள் வரவேற்றார். சன்மார்க்க சபை செயலாளர் பழ. சாமிநாதன்,கல்லூரிக் குழு செயலர் சி.இராம இரமணப்ரியன், முதல்வர் முனைவர் ம. செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


கல்லூரிக்குழு தலைவர் அ. சாமிநாதன் அறிமுக உரையாற்ற நன்னெறிக்கழகப் பொறுப்பாளர் முனைவர் சி. குறிஞ்சி நன்றி கூறினார்.


- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad