இரண்டாம் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் லூலாவின் வெற்றியை உறுதிப்படுத்த பிரேசில் தெருக்களை நமதாக்கிக் கொள்வோம் என்று பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் லூசியானா சான்டோஸ் அறிவித்துள்ளார்.
பிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் லூலாவும், தற்போதைய ஜனாதிபதியும், வலதுசாரி வேட்பாளருமான ஜெய்ர் போல்சோனாரோவும் முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர்.
அக்டோபர் 30 அன்று நடைபெறும் இரண்டாவது சுற்றில் இருவருக்குமிடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்புகள் சொன்னவற்றைத் தாண்டி வலதுசாரி வேட்பாளர் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
இரண்டாவது சுற்றில் இரண்டு நபர்கள் என்பதைத்தாண்டி, இடதுசாரிக் கொள்கைக்கும், வலதுசாரிக் கொள்கைக்கும் இடையிலான போட்டியாக மாறியுள்ளது.
முதல் சுற்றில் பல்வேறு இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்த வேட்பாளர்கள் இருந்தனர். அவர்களை ஒருங்கிணைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
நான்கு விழுக்காடு வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்த டெபெட், லூலாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டார்.
* கம்யூனிஸ்டுகள் ஆதரவு
இரண்டாம் சுற்றிற்கான பிரச்சாரங்கள் தொடங்கியுள்ள நிலையில், பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியும், கிரீன்(பசுமை) கட்சியும், லூலாவுக்கே தங்கள் ஆதரவு என்று அறிவித்துள்ளன.
தங்கள் ஆதரவை அறிவித்த பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான லூசியானா சான்டோஸ், "மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம் என்று தான் பிரேசில் மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற லூலாதான் இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெறுவார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தேர்தலின்போது வெறுப்பு, பிரிவினை, வன்முறை, பட்டினி மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை தாங்கள் விரும்பவில்லை என்பதை மக்கள் வெளிக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த வெற்றியை நாங்கள் கொண்டாட விரும்புகிறோம். ஜனநாயகத்தை நாங்கள் கொண்டாடப் போகிறோம். களத்தில் பிரச்சாரத்தை விரைவில் தொடங்குகிறோம்.
தெருக்களைக் கையில் எடுத்துக் கொள்வோம். ஒவ்வொருவரிடமும் பேசுவோம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். லூலாவுக்குக் கூடுதல் ஆதரவைப் பெறுவோம்" என்று குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் லூலாவின் முதல் சுற்று வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பொலிவியாவின் லூயிஸ் அர்ஸ், அர்ஜெண்டினாவின் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், கொலம்பியாவின் குஸ்தவோ பெட்ரோ மற்றும் மெக்சிகோவின் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் ஆகியோர் முதல் சுற்றில் முதலிடத்தைப் பிடித்ததற்காக லூலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளுக்கு கூடுதல் இடங்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வலதுசாரிகளைத் தவிர்த்த மற்ற இயக்கங்களை ஒன்று திரட்டும் பணி பிரேசிலில் நடைபெறுகிறது.
வெறும் ஒன்றரை விழுக்காடு வாக்குகள் கிடைக்காத நிலையில் வெற்றி தள்ளிப்போனதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கிறார்கள்.
முதல் சுற்றில் கிடைத்த வாக்குகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு, கிடைத்து வரும் கூடுதல் ஆதரவு மூலம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்று இடதுசாரி அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
* சிரோ கோம்சும் ஆதரவு
முதல் சுற்றில் நான்காம் இடத்தைப் பிடித்த சிரோ கோம்சும் தங்கள் கட்சியின் ஆதரவு லூலாவுக்குதான் என்று அறிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இவர் 35 லட்சத்து 99 ஆயிரத்து 287 (3 விழுக்காடு) வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக