கழிவறையில் புகுந்த முதலை... காலை கடனை கழிக்க முடியாமல் தவித்த குடும்பம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 அக்டோபர், 2022

கழிவறையில் புகுந்த முதலை... காலை கடனை கழிக்க முடியாமல் தவித்த குடும்பம்!


உங்கள் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் பலரும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதேபோன்று, நீண்ட நாள் பார்க்காத உறவினர், திடீரென ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் உங்கள் வீட்டு வாசலில் நின்றால் நீங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவீர்கள் அல்லவா... ஆனால், குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்த ஒரு அழையா விருந்தாளியை பார்த்து வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி கலந்த பயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் சொஜித்ரா நகரில் கரகுவா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பிக்பாய் ரத்தோட் என்பவரின் வீட்டின் கழிவறையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று (அக். 9) முதலை ஒன்று வந்துள்ளது. 

அதை பார்த்த அவரின் குடும்பத்தினர். அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த முதலை அருகில் இருந்த குளத்தில் இருந்து அங்கு வந்திருக்கலாம் என கூறப்பட்டது. 

மேலும், முதலை அங்கிருந்து நீண்ட நேரமாக செல்லாததால், அவர்களால் தங்களின் காலை கடனை நிம்மதியாக கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

முதலை புகுந்த அந்த வீட்டின் அருகே கோடியர் மாதா என்ற பெண் தெய்வ கோயில் ஒன்று உள்ளது. 

குறிப்பாக, அந்த தெய்வத்தின் வாகனமும் முதலைதான் என அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. மேலும், இதுபோன்று பொதுவெளியில் முதலைகள் வருவது முதல்முறையல்ல என்றும் கூறுகிறார்கள். முதலை கழிவறைக்கு வந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த வருடமும் அந்த மாதா கோயிலில் முதலை ஒன்றும் புகுந்த நிலையில், அதை மீட்டு பின்னர் காட்டுப் பகுதியில் விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "இப்பகுதியில் வாழும் எங்களின் வீடுகளின் பிறப்புறத்தில் சுவர்கள் ஏதும் கிடையாது. இப்பகுதியைச் சுற்றிலும் முதலைகள் அதிகமாக காணப்படுகிறது. 

சில நேரத்தில், குளத்தில் இருந்து முதலைகள் வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவது இயல்புதான்" என்றார்.

வீட்டின் கழிவறையில் புகுந்த முதலையை பிடிக்க, பக்கத்து கிராமத்தில் இருந்த வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அந்த கிராமத்திலும் அதிக எண்ணிக்கையில் முதலைகள் காணப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டை வைத்து முதலை பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கிராமத்தினர் முதலை குறித்து தகவல் கொடுத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம். 

பின்னர், அந்த முதலையை பத்திரமாக மீட்டோம். அதன் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்தோம். விதிமுறைப்படி முதலையை அதன் வாழ்விட பகுதியில் கொண்டு விட்டுவோம். சொஜித்ரா நகரத்தின் கிராமங்கள் முதலைகளின் சொர்க்கம். 

இங்கு முதலைகள் அதிகம் வசிக்கின்றன. அதனால், இதுபோன்ற தகவல்கள் வந்தவுடன் உடனடியாக அங்கு சென்று முதலையை மீட்டு அதன் வாழ்விட பகுதியில் விட்டுவிடுவோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad