ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் தனது சொத்து மதிப்பில் பாதிக்கும் மேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் இழந்து உள்ளதாக தெரிகிறது. அதனால் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்தை பிடித்துள்ளார். இது ப்ளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தள உலக செல்வந்தர்களின் பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியான தகவலின் அடிப்படையில், மார்க் ஸக்கர்பெர்க் பின்னடைவைக் கண்டுள்ளது தெரிய வருகிறது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு, கடந்த 2014-ம் ஆண்டு வாக்கில் அவர் கொண்டிருந்த சொத்து மதிப்பை காட்டிலும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 106 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 55.9 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இந்த சரிவை சந்தித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் சுமார் 71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிவை எதிர்கொண்டது. அதில் பாதி அவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொத்து மதிப்பை இழந்த செல்வந்தர்களில் ஸக்கர்பெர்க் உடன் இன்னும் பலர் இருப்பதாக தெரிகிறது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என அறியப்படும் எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். பில் கேட்ஸ் 27 பில்லியன் டாலர்களும், மெலிண்டா கேட்ஸ் 26 பில்லியன் டாலர்களை, ஜெஃப் பெசோஸ் 46 பில்லியன் டாலர்களையும் தங்களது சொத்து மதிப்பில் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஃபேஸ்புக் என இருந்த பெயரை மெட்டா என மாற்றிய பிறகு சொத்து மதிப்பில் சரிவை ஸக்கர்பெர்க் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக